நம்மை ஏமாற்ற ATM இயந்திரத்தில் செய்யப்படும் 5 வில்லத்தனங்கள்

Share:
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்ற பெயரில் நமது கையில் இருக்கும் பணத்தை ஒரு பெட்டிக்குள் அடைத்து அதன் முன் நம்மை நிற்க வைத்துவிட்டார்கள். நமது பணத்தேவையை வங்கிகளை விட அவை நிர்வகிக்கும் ஏடிஎம் இயந்திரங்களே விரைவாக பூர்த்தி செய்வதால் மக்கள் ஏடிஎம்மில் பணம் வேண்டி நிற்கின்றனர். இதனால் தான் வங்கி மோசடிகளில் ஈடுபடும் திருடர்கள் பெரும்பாலும் ஏடிஎம் கார்ட் பரிவர்த்தனை மூலமாகவே மோசடி செய்கின்றனர்.


இவ்வாறு பணம் வேண்டி வங்கி ஏடிஎம்க்கு செல்லும் மக்களின் சேமிப்பை மோசடி செய்பவர்கள் புது புது நுட்பங்களை கையாண்டு கொள்ளையடித்து விடுகின்றனர். எனவே நாம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு முன்பாக நாம் எந்தெந்த வழிகளில் ஏமாற்றப்படுகிறோம் என்பதையும் நம்மை ஏமாற்ற குற்றவாளிகள் ஏடிஎம் இயந்திரத்தில் என்ன என்ன காரியங்களை செய்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள அவசியமாகிறது.

எனவே ஏடிஎம் இயந்திரத்தில் மோசடிக்காரர்கள் செய்யும் சில பொதுவான ஏமாற்று வேலைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

1.ஸ்கிம்மர் சாதனம்


மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்ற பொதுவாக பயன்படுத்தும் முறை ஸ்கிம்மிங் என்ற ஏமாற்று வேலையாகும். அதாவது ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள கார்ட் ஹோல்டரின் மீது அதேபோல் உள்ள ஒரு சாதனத்தை பொருத்திவிடுவார்கள். ஸ்கிம்மர் என்ற அந்த சாதனத்திற்கும் ஏடிஎம் உள்ள உண்மையான கார்ட் ஹோல்டருக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இருக்காது.


எனவே நம்முடைய ஏடிஎம் கார்டை அந்த ஸ்கிம்மர் சாதனத்தின் வழியாக நுழைக்கும் போது கார்டில் மேக்னடிக் டேப்பில் பதியப்பட்டிருக்கும் நமது வங்கி விவரங்களை அந்த ஸ்கிம்மர் சாதனம் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொள்ளும். அவ்வாறு எடுக்கப்படும் அந்த பிரதியை கொண்டு மோசடிக்காரர்கள் போலியான ஒரு ஏடிஎம் கார்டை உருவாக்கிக்கொள்வார்கள். மேலும் பின் நம்பரை அறிந்திக்கொள்ள ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள கீபோர்டை நோக்கியவாறு யாரும் அறியாத வண்ணம் ஒரு ரகசிய கேமராவை பொருத்திவிடுவார்கள். மோசடிக்காரர்கள் இவற்றை கொண்டு வங்கியில் இருக்கும் நமது பணத்திற்கு விபூது அடித்துவிடுவார்கள்.


எனவே அடுத்தமுறை உங்கள் ஏடிஎம் கார்டை ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள கார்ட் ஹோல்டரில் நுழைக்கும் முன்பாக அது உண்மையான கார்ட் ஹோல்டர்தானா அல்லது ஸ்கிம்மர் கருவியா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

2. பின்பேட் ஓவர்லே


ஏடிஎம் கார்டில் பதியப்பட்டிருக்கும் தகவல்களை திருட ஸ்கிம்மர் கருவிகளை பயன்படுத்துவதை போல பின் நம்பரை திருடுவதற்கு போலியான கீ பேர்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. பின்பேர்ட் ஓவர்லே எனப்படும் போலியான கீ போர்டை அசலான கீ போர்டிற்கு மேலாக பொருத்திவிடுவார்கள். நீங்கள் உள்ளீடும் செய்யும் உங்கள் பின் நம்பரை இந்த பின்பேர்ட் ஓவர்லே கருவி நகலெடுத்து வைத்துக்கொள்ளும். எனவே நீங்கள் அடுத்த முறை உங்கள் பின் நம்பரை உள்ளீடு செய்வதற்கு முன்பாக சில வினாடிகள் எடுத்துக்கொண்டு இந்த கீ பேர்ட்டை ஆராய்ங்கள்.


நீங்கள் உபயோகிக்கும் ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள கீபேர்டின் எழுத்துக்கள் சற்று பெரியதாகவோ அல்லது வழக்கத்திற்கு மாறாக சிறியாதாகவும் இருந்தால் அந்த ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் ஏடிஎம் இயந்திரத்தில உள்ள கீபேர்டானது வழக்கத்திற்கு மாறாக துருத்திக்கொண்டோ அல்லது லூசாகவோ இருந்தால் அந்த இயந்திரத்தில மோசடிகாரர்கள் ஏதோ உள்வேலை பார்த்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

3. கீ போர்ட் ஜாமிங்


ஏடிஎம் இயந்திரங்களில் மோசடிகாரர்கள் செய்யும் மற்றொரு உள்வேலை கீபேர்ட் ஜாமிங் பிராடு என்பதாகும். கீபேர்டின் ஓரத்தில் உள்ள எண்டர் அல்லது ஓகே மற்றும் கேன்சல் போன்ற பட்டங்களின் ஓரத்தில் பசை, கம்பி அல்லது பிளேடு போன்றவற்றை சொருகி அதை வேலை செய்யாதவாறு செய்துவிடுவார்கள். நீங்கள் உங்கள் ஏடிஎம் கார்ட் சொருகி பின் நம்பரை உள்ளீடு செய்த பின்னர் ஓகே பட்டனை அழுத்தினால் அது வேலைசெய்யாது. கேன்சல் பட்டனும் ஜாமாகி இருப்பதால் உங்களால் அந்த பரிவர்த்தனையை கேன்சல் செய்யவும் முடியாது.


ஏடிஎம் இயந்திரத்தில் பழுது என எண்ணி நீங்கள் சென்ற பின்னர் மோசடி பேர்வழிகள் வேலை செய்யாத பட்டனை விடுவித்து 30 வினாடிகள் வரை கேன்சல் ஆகாத உங்கள் பரிவர்த்தனையை பூர்த்தி செய்து உங்கள் பணத்தை கொள்ளையடித்து விடுவார்கள்.

4. கார்ட் டிராப்பிங்

சில ஏடிஎம் இயந்திரங்களில் நாம் கார்ட் ஹோல்டருக்குள் ஏடிஎம் கார்டை நுழைத்ததும் அது உள்ளே சென்றுவிடும், நாம் பரிவர்த்தனையை முடித்த பின்னரே உள்ளிருக்கும் கார்ட் வெளியில் வரும், அவ்வாறான ஏடிஎம் இயந்திரங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கார்ட் டிராபிங் என்ற முறையை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் தங்கள் கைவரிசையை காண்பிக்கின்றனர். கார்ட் டிராபிங் என்பது நமது ஏடிஎம் கார்டை உள்ளேயே சிக்க வைத்து நம்மை ஏமாற்றும் ஒரு வேலையாகும். அதாவது கார்ட் ஹோல்டர் சிலாட்டில் உள்ளே ஒரு சிறு கருவியை பொருத்திவிடுவார்கள். நாம் கார்ட் ஹோல்டரில் கார்டை நுழைத்ததும் அது உள்ளே சென்றுவிடும், நாம் பரிவர்த்தனையை முடித்த பின்பு கூட நம்முடைய கார்ட் வெளியில் வராது. ஏனெனில் மோசடிகாரர்கள் பொருத்தியுள்ள கருவியானது கார்டை வெளியில் வரவிடாது.


சிறிது நேரம் நாம் மண்டைகாய்ந்துவிட்டு ஏடிஎம்மில் ஏதோ பழுது என நினைத்துக்கொண்டு சென்ற பின்னர் மோசடி பேர்வழிகள் நமது கார்டை வெளியில் எடுத்துகொள்வார்கள். பின் நம்பரை ரகசிய கேமரா அல்லது பின்பேர்ட் ஓவர்லே என்ற கருவியின் மூலம் அறிந்துக்கொள்வார்கள்.

5. கேஷ் டிராபிங்

ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை நுழைத்து பின் நம்பரை அழுத்தி தேவையான பணத்தை உள்ளீடு செய்த பின்னர் நாம் பணம் வெளிவருவதற்க்காக கேஷ் டிஸ்பென்சரை வெறித்து பார்த்துக்கொண்டு இருப்போம். ஆனால் பணம் வெளியில் வராது. அதே நேரத்தில் நாம் உள்ளிட்ட பணம் டெபிட்டெட் என நமது மொபைல் நம்பருக்கு ஒரு மெசேஸ் மட்டும் வரும். இதற்கு காரணம் கேஷ் டிராப்பிங் எனும் திருட்டுதனமாகும்.


அதாவது மோசடி பேர்வழிகள் கேஷ் டிஸ்பென்சரில் ஒரு கருவியை பொருத்தி பணம் வெளியில் வருவதை தற்காலியமாக நிறுத்தி வைத்திருப்பார்கள். நாம் பணம் வெளியில் வராததால் ஏடிஎம் இயந்திரத்தில் பழுது என கருதி சென்றபின் மோசடி பேர்வழிகள் கேஷ் டிஸ்பென்சரில் சிக்கி இருக்கும் பணத்தை விடுவித்து எடுத்துக்கொள்வார்கள். என்வே சந்தேகத்திற்கு இடமான ஏடிஎம்களில் ஒரு சிறு தொகையை மட்டும் எடுங்கள். ஏடிஎம் இயந்திரம் பிரச்சனை இல்லாமல் இயங்கினால் அதன் பின் உங்களுக்கு தேவையான பணத்தை உள்ளீடு செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.