கூகுளின் அதிரடி முடிவு.. அதிரடியான பல திட்டங்கள்..

Share:
கூகுள் நிறுவனம் கடந்த சில வருடங்களாக `கூகுள் ஃபார் இந்தியா' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள், தயாரிப்புகள் ஆகியவை அறிமுகம் செய்யப்படும். அப்படி இந்த வருடமும் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. 
கூகுளின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் என்னவெல்லாம் இருக்கிறது?

சாம்சங்கின் `ஆண்ட்ராய்டு கோ'
தனது இயங்குதளமான `ஆண்ட்ராய்டை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்க்கவேண்டும்' என்பதே கூகுளின் ஆசை. அதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் இந்த ஆண்ட்ராய்டு கோ. ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனில், ஹார்டுவேரின் திறன் குறைவாக இருந்தாலும் சிறப்பான யூசர் எக்ஸ்பீரியன்ஸை கொடுக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இதற்காக ஏற்கெனவே பல்வேறு மொபைல் நிறுவனங்களுடன் செயல்பட்டு வந்த கூகுள், தற்போது சாம்சங்குடன் இணைந்து J2 Core மொபைலைக் கொண்டுவரவிருக்கிறது.

கூகுள் பே

Tez ஆப்பின் பெயரை, கூகுள் பே (Google Pay) என மாற்றியிருக்கிறது கூகுள். இத்தோடு நிற்காமல் புதிதாக சில வசதிகளையும் சேர்த்திருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு 22 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் என்பதுதான் இதன் இப்போதைய நிலை; இனி இன்னும் அதிகரிக்கலாம்.

கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி

கிராமங்களுக்கும் அதிவேக இணையத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆந்திர அரசுடன் கைகோத்திருக்கிறது கூகுள். ஆந்திர அரசின் `ஆந்திர பிரதேஷ் ஸ்டேட் பைபர் நெட் லிமிடெட்' நிறுவனத்துடன் இணைந்து மாநிலத்தில் உள்ள 12,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்பகுதிகளுக்கு அதிவேக இணைய வசதியைக் கொண்டு சேர்க்கும் பணியில் இதன்மூலம் கூகுள் ஈடுபடும்.

நவ்லேகா

தற்பொழுது இணையத்தில் இருக்கும் பக்கங்கள் தொடங்கி கட்டுரைகள் வரை பெரும்பாலானவை ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. இதற்கு மாறாக பிராந்திய மொழி பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிப் பதற்கான திட்டம்தான் நவ்லேகா. தற்போது அச்சில் மட்டுமே இயங்கிவரும் பதிப்பகங்களை இணையத்தை நோக்கி இழுக்கும் முயற்சி இது. இதற்கான எல்லா டெக்னிக்கல் உதவிகளையும், பதிப்பகங்களுக்கு கூகுளே வழங்கும்.
Image Copyright: Google