போற போக்கைப்பார்த்தா சைனாக்காரன் அமெரிக்காவை கீழே தள்ளிவிட்டுடுவான் போல இருக்கு

Share:


போற போக்கைப்பார்த்தா சைனாக்காரன் அமெரிக்காவை கீழே தள்ளிவிட்டுடுவான் போல இருக்கு. கடந்த10 வருடங்களில் தான் அந்நாட்டில் எத்தனை வளர்ச்சி, வெளிநாடுகளுக்கு தங்கள் பொருட்களை தயாரித்து அதிகப்படியாக ஏற்றுமதி செய்கின்றார்கள். வெளிநாடுகளில் உள்ள பல பிரபல தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை சரிவடையச் செய்துள்ளார்கள். ஏற்றுமதி வர்த்தகம் மூலம் பல்லாயிரம் கோடிகள் அந்நிய நாட்டு வருமானம் கிடைக்கின்றது. முன்னேற்றப்பாதையில் சைனா தற்போது.
No automatic alt text available.
இந்தியாவைக்காட்டிலும் அதிக மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் போக்குவரத்து மற்றும் சாலை தண்டவாள வசதிகள், குடிநீர், மின்சாரம், இணையம், உள்கட்டமைப்பு வசதிகள் என சிறப்பாக உள்ளது. ‍அமெரிக்கா தற்போது அந்நாட்டைக்கண்டு சற்றே அஞ்சத்தொடங்கிவிட்டது. போகின்ற வேகத்தைப்பார்த்தால் 2030க்குள் மிகப்பெரிய அளவிற்கு அந்நாடு உலகஅளவில் முன்னேற்றம் கண்டுவிடும் போலுள்ளது.

இங்க என்னடான்னா நம்ம பிரதமர் இன்னும் நான்கு வருடங்களில் இந்திய பொருளாதாரத்தில் நான்கு மடங்கு வளர்ச்சி பெறும்னு சொல்லிகிட்டு இருக்காரு. எந்த அடிப்படையில் சொல்றாருன்னுதான் புரியலே. விலைவாசி மட்டும்தான் வளர்ச்சி அடைஞ்சுகிட்டு வருது நம்ம நாட்ல. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிஞ்சுகிட்டே போயிடுச்சு.

வெள்ளைக்காரன் நம்ம நாட்டை விட்டு போறப்போ டாலருக்கு இணையாக இருந்த ரூபாயின் மதிப்பு இன்னைக்கு அதளபாதாளத்திற்கு சரிஞ்சுபோச்சு. இதனை எப்படி சரிசெய்வதுன்னு மத்திய அரசுக்கு தெரியலே. டீஃபால்ட்டா ஃபைனான்ஸ் மினிஸ்ட்டர் சொல்றது என்னென்னா உலக நாடுகள் அனைத்துமே தற்போது இந்த பணவீக்கத்தை சந்திச்சுகிட்டு வருதுங்கிறதுதான். இந்திய பொருளாதாரமும் உயரலே. விவசாயம் உற்பத்தி அழிஞ்சுகிட்டே வருது. அந்நியச்செலாவணியும் குறையலே. ஏற்றுமதியும் கணிசமாக குறைஞ்சுபோச்சு. அப்பறம் எப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்?

1950ல் இருந்து 1965 வரை(16 ஆண்டுகள்) டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெறும் 4ரூபாய் 86 காசுகள் மட்டுமே. 1980ல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7.86 காசுகளாக உயர்ந்தது. பின்னர் 1990ல் டபுளாகி 17.50 காசுகளா ஆச்சு. 1996ல் அது 36 ரூபாயாக அதாவது 6 வருடங்களில் மீண்டும் டபுளாக உயர்ந்துபோச்சு. 12 வருஷத்திலே 7.86 காசுகளாக இருந்த அமெரிக்கா டாலர் 36 ரூபாய்க்கு போனபோதே மத்தியில் ஆட்சி நடத்திக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா ஆட்சியாளர்கள். பொருளாதார சரிவினை தூக்கி நிறுத்தி இருக்கவேண்டாமா? செய்யவே இல்லை.

எப்போ நம்ம நாட்ல விவசாய உற்பத்தி பெருகி, ஏற்றுமதி வணிகம் அதிகமாகி, உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகி, இறக்குமதி குறைஞ்சு, உள்கட்டமைப்பு வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வெளிநாட்டு தொழிலதிபர்கள், இந்தியா வாழ் மக்கள் இங்கே வந்து தொழிற்சாலைகள் அமைத்து தொழில் தொடங்குகின்றார்களோ அதுவரை நம்ம நாட்டோட பொருளாதார வளர்ச்சி, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.மூலமும், வருமானவரி மூலமாக வரிகள் கூடுதலாக கிடைத்தல்,மானியங்களை குறைத்தல் போன்றவற்றால் உயரவே போவதில்லை.

நம்ம நாட்டைப்பொறுத்தவரை என்ன ஆனாலும் பொருளாதாரம் சரிஞ்சாலும், விலைவாசி ஏறிகிட்டே போனாலும், பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு போனாலும் எந்த கவலையும் இல்லாம வாழ்றவன் பணக்காரன். எதுவுமே இல்லாம ரோடோர பிளாட்பாரத்திலே படுத்துறங்கி டெய்லி கூலி வேலைக்கு போய்ட்டு மூனு வேளை சோறு கிடைச்சா அதுவுமே போதும்னு வாழ்ந்துகிட்டு இருக்கற அடிமட்டமக்கள் எதைப்பத்தியும் கவலைப்படப்போறது இல்லே.

இப்படியும் இல்லாம அப்படியும் இல்லாம வாழ்ந்துகிட்டு இருக்கிற நடுத்தர மக்கள் நிலைதான் மிகவும் பரிதாபம். ஆனால் அவர்கள் தான் நம்ம நாட்ல 80 சதவீதம் பேருக்கு மேல இருக்காங்க. அவர்கள் யாருன்னா வேற யாருமில்லே நாம தான். புலம்பிகிட்டே அன்றாடம் போய்க்கிட்டு இருக்கோம். அப்துல் கலாம் கனவு நிறைவேறாம போனாக்கூட பரவாயில்லை. எந்த விலைவாசியையும் கணிசமாக உயர்த்தாம நம்மளை நிம்மதியா இருக்கவிட்டாப் போதும். முடியலே. இந்தியா மிகப்பெரிய பணக்காரர்களுக்கும் பிளாட்பார வாசிகளுக்கும் சொர்க்க பூமி.

நம்மைப்போன்ற நடுத்தர வர்க்கங்களுக்கு????