தங்கம் விலை 5 மாதங்களில் இல்லாத அளவு சரிவு

Share:
ஆடி மாதம், திருமண சீசன் குறைந்தது, சர்வதேச நிலவரம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து 2,844 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக அமெரிக்க டாலர் மதிப்பு சரிவடைந்து வருவதுடன், தங்கம் விலையும் குறைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 0.32 சதவீதம் குறைந்து 1,223.30 டாலர்களாக விற்பனையாகிறது.

இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதுமட்டுமின்றி ஆடி மாதம் தொடங்கியுள்ளதாலும், திருமணம் போன்ற சீசன் குறைந்துள்ளதாலும், இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவாக குறைந்தது. டெல்லியில் 10 கிராம் 99.9 சதவீத சுத்த தங்கம் 30,800 ரூபாயாகவும், 99.5 சதவீத சுத்த தங்கம் 30,650 ரூபாயாகவும் விற்பனையாகிறது. 8 கிராம் சுத்த தங்கம் 24,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சுத்த தங்கத்தின் விலை சவரன், 23,896 ரூபாயாகவும், ஒரு கிராம் 2,987 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

22 காரட் ஆபரணத் தங்கம், சவரன் 22,752 ரூபாயாகவும், ஒரு கிராம் 2,844 ரூபாயாகவும் விற்பனையாகிறது.