குரூப் 4 தேர்வு: 33,000 பேருக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு

Share:
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 33,000 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் 16 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் ஆகியோர் தேர்வாணைய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:-
tnpsc certificate verification

கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு, குரூப் 4 தேர்வுடன் இணைந்து முதல் முறையாக நடத்தப்பட்டது. இந்தத் தேர்வினை 17 லட்சத்து 53 ஆயிரத்து 154 பேர் எழுதினர். இந்தத் தேர்வில் தனிநபர் விவரங்கள் அடங்கிய தாளில் எந்த முறைகேடும் செய்ய முடியாதபடி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எந்தத் தேர்வு மையத்திலும் தேர்வுக்கூட அடையாள அட்டை தவறுதலாக அச்சிடப்பட்டதாக புகார் இல்லை. மொத்தத்தில் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத வகையில் தேர்வு நடைபெற்றது.


ரூ.12 கோடி சேமிப்பு: கிராம நிர்வாக அலுவலர் தேர்வும், குரூப் 4 தேர்வும் இந்த முறை ஒன்றாக நடத்தப்பட்டது. இதனால் ரூ.12 கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிக அதிக அளவில் தேர்வர்கள் எழுதிய தேர்வாக இது அமைந்துள்ளது. 

புதிய காலியிடங்கள்: தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில், கிராம நிர்வாக அலுவலர் பிரிவில் 494 இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவித்திருந்தோம். ஆனால், இப்போது காலியிடங்களின் எண்ணிக்கை 1,107-ஆக அதிகரித்துள்ளது. தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில் ஒட்டுமொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,351-ஆக இருந்தது. இது இப்போது 11,0280-ஆக உயர்ந்துள்ளது. இந்த இடங்களுக்கும் சேர்த்தே கலந்தாய்வு நடத்தப்படும்.

ஒரு பணியிடத்துக்கு: ஒரு பணியிடத்துக்கு மூன்று பேர் வீதம் சுமார் 33 ஆயிரம் பேருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் தங்களது சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்களை ஆகஸ்ட் 16 -ஆம் தேதி முதல் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 30 -ஆம் தேதி கடைசி நாளாகும். இதன் பிறகு, பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அக்டோபர் கடைசி வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்.


செல்லிடப்பேசி மூலம்: சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் போன்றவற்றின் மூலமாகத் தெரிவிக்கப்படும் என்றனர் அவர்.

குரூப் 2 தேர்வு அறிவிக்கை எப்போது?

குரூப் 2 தேர்வுக்கான அறிவிக்கை வரும் 15 -ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். தேர்வாணையத்தில் நான்கு உறுப்பினர்கள் இருந்தாலும் பணிகளில் எந்தத் தொய்வும் இல்லை. தேர்வுக் கால அட்டவணைப்படி 9 தேர்வுகளை மட்டுமே குறித்த காலத்துக்குள் நடத்த முடியவில்லை. இரண்டு மாதங்கள் வரை காலதாமதம் ஆகியுள்ளது. தேர்வுக் கால அட்டவணைப்படியே குறிப்பிட்ட காலவரையறைக்குள் தேர்வுகளை நடத்துவோம்' என்று தேர்வாணைய அதிகாரிகள் நந்தகுமார், ஆர்.சுதன் ஆகியோர் தெரிவித்தனர்.