கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதிஉதவி..! இந்திய அரசு ஏற்க மறுக்கிறதா? இதுதான் காரணமா?

Share:
ஆகஸ்டு 8 ஆம் தேதியில் இருந்து கேரளாவில் எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வரலாறு காணாத மழையால் கடவுளின் தேசம் என்ற அழைக்கப்படும் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில்,மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒட்டு மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது. தொடர்வண்டி போக்குவரத்து, மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என அனைத்தும் முற்றிலும் முடங்கியது. 


கனமழையால், சாலைகள் அனைத்தும் சேதமடைந்தது. பல்வேறு சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து, இதுவரை 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போய்விட்டனர். மீட்பு படையினர் காணாமல் போனவர்களையும், மண்சரிவில் சிக்கி உள்ளவர்களையும் மீட்டு வருகின்றனர். தற்போது தான் கேரளாவில் மழையின் அளவு சற்று குறைந்து வருகிறது. 

இதனிடையே, கடும் கனமழையால் கேரளா தொடர்ந்து தத்தளித்து வருவதால், கேரளாவுக்கு உதவுமாறு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார். 


இதையடுத்து அனைத்து மாநிலங்களும் கேரளவுக்கு போட்டி போட்டு கொண்டு உதவி செய்து வருகிறது. 

இந்நிலையில், கேரள வெள்ளத்துக்கு, ஐக்கிய அரபு அமீரகம் ரூ. 700 கோடியை வழங்க முன் வந்தது. ஆனால், ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அளிக்கும் நிவாரண நிதியை, இந்திய அரசு ஏற்குமா? என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. 

கடந்த, 2004-இல் இந்தியாவில் ஏற்பட்ட சுனாமி பேரழிவின் போது ஏற்பட்ட பாதிப்புக்கு, பல வெளிநாடுகள் நிதிஉதவி அளிக்க முன் வந்தது. ஆனால் அவ்வுதவியை இந்தியா அரசு மறுத்துவிட்டது. 

வெளிநாட்டில் இருந்து நிதி உதவியை இந்தியா மறுக்க இதுதான் காரணமா? 

2004-இல் நடந்த சுனாமி பேரழிவின் போது, அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வெளிநாடுகளின் நிதி உதவியை ஏற்க மறுத்தார். அன்று முதல் இன்று வரை இந்த கொள்கை, இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரப்படுகிறது. 

கடந்த 2013 உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் வெளிநாடு நிதியுதவிகளை ஏற்க இந்தியா அரசு மறுத்துவிட்டது. 

மேலும், இதுபோன்ற பேரழிவுகளையும், அதன் சேதங்களை சீர் செய்ய இந்தியாவிலேயே போதுமான வசதிகள் இருக்கிறது என்று இந்திய அரசு தெரிவிக்கிறது. 

கடந்த 14 வருடங்களாக இந்த கொள்கையை இந்திய அரசு கடைபிடித்து வருவதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் ரூ.700 கோடி நிவாரண உதவியை மத்திய அரசு ஏற்குமா என்பது சந்தேகமாக உள்ளது.