அதிமுகவில் உண்டான புதிய சிக்கல்! உச்சக்கட்ட தலைவலியில் ஓபிஎஸ் இபிஎஸ்! சமாளிக்க முடியுமா?!

Share:
விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளால் அதிமுகவிற்கு புதிய சிக்கல் உள்ளது. திருவாரூர் தொகுதி என்பது முன்னாள் முதலவர் மறைந்த கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதி என்பதால், அங்கு மீண்டும் வெல்ல வேண்டும் என்பதை திமுகவினர் இலக்காக வைத்துள்ளார்கள். வெற்றி பெற திமுக தலைமை தீவிர சிந்தனையில் இருக்கிறது. 

அதேபோல திருப்பரங்குன்றம் தொகுதி என்பது அதிமுகவின் கோட்டையாகும். அங்கு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு இருப்பதால் தேர்தல் பணியில் தீவிரமாக களமிறங்க அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர். 

அண்மையில் நடைபெற்ற திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், ‘‘திருவாரூர் தனக்கும் சொந்த தொகுதிதான். கருணாநிதி நின்றபோது திமுக வெற்றி பெற்றிருக்கலாம். இனி அது நடக்காது’’ என்று சவால் விட்டு பேசியிருக்கிறார். அதேபோல திருப்பரங்குன்றத்துக்கு தினகரனை அழைத்து பொதுக்கூட்டம் நடத்த அமமுகவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்குள் அவசர அவசரமாக அதிமுக பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை நடத்திவிட்டது. 
அக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திருப்பரங்குன்றத்தில் வெற்றிபெறுவோம் என உறுதியாக கூறினார்கள். 

இங்கே என்ன சிக்கல் இருக்கிறது? மதுரை அதிமுகவில் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தனித்தனி கோஷ்டியாக செயல்படுவதாக கூறப்படுகிறது. அதனால், இந்த தொகுதி வேட்பாளர் தேர்விலேயே அதிமுகவில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்படும் என அதிமுகவினர் கவலையில் உள்ளனர். இதனால் ஓபிஎஸ் இபிஎஸ் இதனை எப்படி சமாளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் எழுந்துள்ளது.