ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் தாக்கம் ஆரம்பம்… வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள் உயருகின்றன?

Share:
டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ரூபாயைத் தாண்டி கீழே சரிந்துள்ள நிலையில், இதன் பாதிப்பு பல்வேறு பொருட்களின் விலைவாசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயரும் என்று கூறப்படுகிறது. வீட்டு உபயோக மின்சாதன தயாரிப்பு நிறுவனங்களும் இதனை ஒப்புக்கொண்டுள்ளன.
கடந்த சில மாதங்களாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் ரூபாய் மதிப்பு 9 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதற்கு முன்னர் 2013-ஆம் ஆண்டு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 93 காசுகளாக சரிந்தது. அதன்பிறகு தற்போதுதான் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதாவது 70 ரூபாய் 40 காசுகள் அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது. இது இந்தியாவின் பல்வேறு துறைகளிலும் தற்போது பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கியுள்ளது.கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஏற்கெனவே பல்வேறு பொருட்களின் விலைவாசியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை உயர்த்தப்போவதாக சோனி, பேனசோனிக், கோத்ரெஜ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மின்சாதப் பொருட்களுக்கான உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதால், இவற்றின் தாக்கத்தை நுகர்வோர் மீது சுமத்துவதைத் தவிர, தங்களுக்கு வேறு வழியில்லை என்று இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.
பக்ரீத், ஓணம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி என்று பண்டிகைக் காலம் துவங்கவுள்ள நிலையில், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதால், விலை உயர்வை அமல்படுத்துவதற்கு இதுதான் பொருத்தமான காலமாக இருக்கும் என்றும் நிறுவனங்கள் கருதுகின்றன.கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் தொழில் பிரிவுத் தலைவரான வி.பி. கமல் நந்தி, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “ரூபாயின் மதிப்பு 70-க்கு மேல் சரியும்போது, எங்களுக்கான உற்பத்திச் செலவு அதிகரித்து பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுகின்றன; இதேநிலை நீடித்தால் எங்களது பொருட்களுக்கான விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை; பண்டிகை தினங்களுக்கு முன்பாக ஆகஸ்ட் மாத இறுதியில் விலைகள் உயர்த்தப்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல, “ரூபாய் மதிப்பு சரிவால் பொருட்களின் விலையை உயர்த்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” என்று பேனசோனிக் நிறுவனத்தின் தெற்காசியப் பிரிவின் தலைமைச் செயலதிகாரியான மணிஷ் சர்மாவும் கூறியுள்ளார்.
கடந்த மாதத்தில் பல்வேறு மின்சாதன விற்பனை நிறுவனங்கள் 32 அங்குலம் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவு திரைகொண்ட தொலைக் காட்சிகளின் விலையை உயர்த்தியிருந்தன. தற்போது விலை இன்னும் உயர்த்தப்படலாம் என்பது, மக்களின் இந்தாண்டு பண்டிகைக் கால மகிழ்ச்சியில் பாதியை குறைந்து விடும் என்றே தெரிகிறது.