இந்த ஆட்சி எதனால் தொடர்கிறது தெரியுமா? சசிகலாவை சந்தித்த தினகரன் வெளியிட்ட தகவல்!

Share:
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள சொத்து குவிப்பு வழக்கின் குற்றவாளிகள் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரன் தனது மனைவி அனுராதா மற்றும் குடும்பத்தினருடன் சென்று சந்தித்தார். நேற்று சசிகலாவுக்கு பிறந்தநாள் அதனால் இந்த சந்திப்பு நடந்துள்ளது. 
சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கிய தினகரன், செய்தியாளர்களை சந்தித்த போது, கர்நாடகத்தில் இருந்து வரும் காவேரி நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. தமிழக அரசு ரூ.400 கோடியை தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார ஒதுக்கீடு செய்தது. இந்த பணம், தூர்வாரும் பணி என்ற பெயரில் மறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட வேண்டும் ஆனால் இங்கே நீர் திறக்கப்படும் காலங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படும் என அறிவித்துள்ளார்கள். காவிரியில் அதிகளவில் நீர் வருவதால் தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர் ஆனால் அரசு ஒருபோதும் செய்யாது.

தூர்வாரப்படும் என்ற இந்த திட்டம் ஊழல் செய்வதற்கான ஒரு திட்டம். அரசு ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். நடக்க இருக்கும் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் அதில் குக்கர் சின்னம் தான் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு எப்போதோ முடிந்திருக்க வேண்டியது. ஆனால் கால சூழ்நிலையால் தாமதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சி நீதிமன்ற கருணையால் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தினகரன் கூறியுள்ளார்.