ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் ஆதார் உதவி எண்ணை ‘சேவ்’ செய்தது யார்?: கூகுள் அறிவிப்பு

Share:
ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் ஆதார்ஆணையத்தின் உதவி எண்ணை ‘சேவ்’ செய்ததற்கு கூகுள்நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. 

ஆதார் ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவின் ஆதார் எண்ணை வைத்து அவரது தனிப்பட்ட தகவல்களை சொல்லி, ஆதார் எண்ணின் பாதுகாப்பு குறித்த சர்ச்சை கிளப்பியவர் எலியட் அல்டர்சன். பிரான்ஸ் நாட்டு இணையப் பாதுகாப்பு வல்லுநர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இவர் ஆதார் ஆணையத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளை ஆராய்ந்து வருகிறார். 

இவர் வெள்ளிக்கிழமையன்று இந்தியாவில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் ஆதார் ஆணையத்தின் உதவி எண் (18003001947 / 1947) சேமிக்கப்பட்டுள்ளது என்று தனது ட்விட்டர் பதிவில் கூறினார். பலரும் அவர் சொன்னபடி தங்கள் மொபைலில் ஆதார் உதவி எண் தானாகவே பதிவாகியுள்ளதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, ட்விட்டரில் ஆதார் ஆணையத்தை விமர்சிக்கத் தொடங்கினர்.
ஆதார் ஆணையம் அனுமதி பெறாமல் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் தனது உதவி எண்ணை ‘சேவ்’ செய்துவிட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதிலளித்த ஆதார் ஆணையம், “எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தையோ மொபைல் தயாரிப்பு நிறுவனத்தையோ ஆதார் எண்ணை அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களில் புகுத்துமாறு கேட்கவில்லை.” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கூகுள் நிறுவனம் இதற்குப் பொறுப்பேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “2014ஆம் ஆண்டு இந்திய மொபைல் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆண்ட்ராய்ட் வெர்ஷனில், 112 என்ற உதவி எண்ணைச் சேர்க்கும் போது ‘கவனக்குறைவாக’, ஆதார் உதவி எண்ணையும் சேர்த்துவிட்டோம்” என்று கூறியுள்ளது.