தேடுதல் வேட்டை நடத்தும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேலுக்கு அ.தி.மு.க அரசு ஏன் தடையாக உள்ளது?

Share:
சிலை திருட்டு வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க அரசு முடிவு எடுத்திருக்கிறது என்று அ.தி.மு.க. அரசு தெரிவித்திருக்கிறது. சிலை திருட்டு வழக்குகளை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "முதலில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேலுவை சிலை திருட்டு தடுப்புப் பிரிவிற்கு நியமிக்கவே தமிழக அரசு தயங்கியது. ஐகோர்ட்டு உத்தரவுகளை மதிக்காதது ஏன் என்று, நான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, ஐகோர்ட்டு கூறியபடி அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் பதிலளித்தார்.

தற்போதைய அரசு செய்வதை பார்த்தால், உயர்நீதிமன்றம் அனைத்தையும் கண்காணிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக சிலை திருட்டு தடுப்புப் பிரிவையே கலைத்து விடுவதற்கு அ.தி.மு.க. அரசு தயாராகி வருவதுபோல் தெரிகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சிலை திருட்டு வழக்கை விசாரிக்கும் ஐ.ஜி.க்கு முழு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வந்த அ.தி.மு.க. அரசு, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை, ஐ.ஜி. பொன் மாணிக்கவேலு தலைமையிலான சிலை திருட்டு தடுப்புப்பிரிவு கைது செய்தவுடன், அந்த ஐ.ஜி.பொன் மாணிக்கவேலு மீதே நம்பிக்கையில்லை என்றுநீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.


இந்த வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றுகிறோம் என்பதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. எனவே சி.பி.ஐ.க்கு மாற்றும் முடிவினை கைவிட்டு, ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கண்காணிக்கும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை திருட்டு தடுப்புப் பிரிவு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கி, சிலையை மீட்பதற்கு அதிமுக அரசு தடையாக இருக்க கூடாது என்றும், விரைவில் அணைத்து சிலைகளையும் மீட்கவேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நடத்தி வரும் விசாரணையில் திருப்தி இல்லை என்று அரசு கூறி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. என்று பல அரசியல் பிரமுகர்களும் கூறிவருகின்றனர்.