சகோதரச் சண்டையின் அடுத்தக்கட்டம் - திமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு

Share:
கருணாநிதி மறைவால் காலியாகியிருக்கும் திருவாரூர் தொகுதியில் அடுத்து நிற்கப்போவது யார் என்பதுதான் தி.மு.க-வில் மட்டுமின்றி, வெளியிலும் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது. சமீபகாலமாக தி.மு.க மேடைகளில் அதிகம் தென்படும் உதயநிதி ஸ்டாலின், இங்கு வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று பரவலான பேச்சு நிலவுகிறது. ‘தாத்தாவின் தாய்மண்ணிலிருந்து பேரனின் அரசியல் ஆரம்பமாகட்டும்’ என ஸ்டாலின் குடும்பத்தில் சிலர் விரும்புகின்றனர்.


கருணாநிதி மனதால் நேசித்த தொகுதி இது. தமிழ்நாட்டில் எங்கு நின்றாலும் ஜெயிக்கலாம் என்ற சூழல் இருந்தபோதுகூட, அவர் தன் இறுதிக்காலத்தில் தொடர்ச்சியாக இரு முறை இங்கு போட்டியிட்டார். கடந்த தேர்தலில், தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் அவர் ஜெயித்தார். அவர் போட்டியிட்ட தேர்தல்களிலேயே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்ததும் திருவாரூரில்தான். அதனால்தான், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் என்ட்ரியை இங்கிருந்து தொடங்க வேண்டும் எனக் குடும்பத்தில் உள்ளவர்கள் விரும்புகிறார்கள்.’’ 

சில மாதங்களுக்கு முன்பு, டெல்டா மாவட்டங்களில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மீட்புப் பயணம் போனார். அப்போது, திருவாரூரில் மட்டும் உதயநிதி ஸ்டாலின் எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்று மக்களுடன் இணக்கமாகப் பழகினார். ‘கருணாநிதி இங்கு போட்டியிட்டபோது தி.மு.க-வினர் மட்டுமல்லாமல், மற்ற கட்சியினரும் அவருக்கு ஓட்டு போட்டார்கள். அவர் மறைவால் காலியாகும் தொகுதியில், அந்தக் குடும்பத்திலிருந்து ஒருவர் நிற்கும்போது, அதே அளவு ஆதரவு கிடைக்கும். முதல் தேர்தலில் இப்படிப் பெரும் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்துவிட்டால் போதும்... அரசியலில் உதயநிதியை எல்லோரும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகிவிடும்’ என்கிறார்களாம் உதயநிதியின் அரசியல் வட்டார நண்பர்கள்.

ஆனால், ஸ்டாலின் குடும்பத்தில் சிலருக்கு ஒரே ஒரு நெருடல் மட்டும் இருக்கிறது. கருணாநிதி திருவாரூரில் இரண்டு முறை ஜெயித்திருந்தாலும், தி.மு.க-வால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. சென்டிமென்ட்டாக அதை ஒரு தடையாகப் பார்க்கிறார்கள்.

இதனிடையே தமிழகத்தில் காலியாக இருக்கும் மற்றொரு தொகுதியான திருப்பரங்குன்றத்தில் தனது மகன் துரை தயாநிதியை களமிறக்கினால் என்ன என்கிற எண்ணத்தில் இருக்கும். மு.க அழகிரி இது தொடர்பான பூர்வாங்க பணிகளையும் செய்ய ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இதன்மூலம் திமுகவில் சகோதரச் சண்டை அடுத்தத் தலைமுறைக்கும் பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.