ஸ்டாலின் அதிருப்தியாளர்களை திரட்டி புதிய அமைப்பு துவக்க அழகிரி வியூகம்

Share:
தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மீது அதிருப்தியில் உள்ளோரை ஒருங்கிணைத்து, புதிய அமைப்பு துவங்க, அவரது அண்ணன் அழகிரி வியூகம் வகுத்து வருகிறார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு, 13ம் தேதி, குடும்பத்துடன் சென்று, அவரது மூத்த மகன் அழகிரி, அஞ்சலி செலுத்தினார். அப்போது, 'கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என் பக்கம் உள்ளனர். அவரிடம், என் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளேன். 'என் ஆதங்கம் கட்சி தொடர்பானது தான். தி.மு.க., சொத்துகளும், கட்சி நிதியும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன' என, அழகிரி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை, அறிவாலயத்தில் நடந்த தி.மு.க., செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய

மாவட்ட செயலர்கள், 'ஸ்டாலின் தலைமையை ஏற்போம்' என, உறுதி அளித்தனர். இதுபற்றி அறிந்த அழகிரி, சென்னையில் முகாமிட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, வியூகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. வரும், 20ம் தேதிக்கு பின், மதுரை திரும்பும் அவர், தன் ஆதரவாளர்களை அழைத்து, புது அமைப்பு துவக்குவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள, ஸ்டாலின் அதிருப்தியாளர்களை, தன் அணியில் திரட்டவும் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, தென் மண்டலம், மேற்கு மண்டலங்களில் உள்ள அதிருப்தியாளர்களிடம், அழகிரி பேசி வருவதாக, அவரது ஆதரவாளர்கள் கூறினர்.
'சவால்களை வெல்வேன்' :

இதற்கிடையில், தொண்டர்களுக்கு ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதம்: கருணாநிதியை இழந்த, தி.மு.க.,வில் என்ன நடக்கிறது என்பதில், நம்மை விட, அரசியல் எதிரிகள், அக்கறை காட்டுகின்றனர். ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கலாமா என, நப்பாசை கொண்டிருக்கின்றனர். நான், கருணாநிதியால் வளர்த்தெடுக்கப்பட்டவன். சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன். கட்சிக்குள்ளும், புறமும் உருவாக்கப்படும் சவால்களை, தொண்டர்கள் துணையோடு வென்று காட்டுவேன். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


சென்னை கூட்டத்தில் அமித்ஷா?

கருணாநிதிக்கு, புகழஞ்சலி நடத்தும் கூட்டங்கள் குறித்த அறிவிப்பை, தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ளது. வரும், 17ம் தேதி திருச்சி; 19, மதுரை; 25, கோவை; 26, நெல்லை; 30ம் தேதி சென்னை ஆகிய இடங்களில், பல்வேறு தலைப்புகளில், புகழ் அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் நடக்கும் புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்க, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், முதல்வர்கள் நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் மற்றும் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.