அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை 116 ஆக குறைந்ததால் ஆட்சிக்கு ஆபத்தா?

Share:
தமிழக சட்டசபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை, 116 ஆக குறைந்தது.


தமிழக சட்டசபையில், மொத்தம், 234 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், அ.தி.மு.க.,விற்கு, 136 எம்.எல்.ஏக்கள்; தி.மு.க.,விற்கு, 89; காங்கிரசுக்கு, 8;முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு எம்.எல்.ஏ., இருந்தனர். ஜெ., மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 135 ஆக குறைந்தது. அதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், 2017 செப்., 18ல், தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 117 ஆக குறைந்தது. அதே ஆண்டு, டிசம்பர் மாதம் நடந்த, சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், வெற்றி பெற்றார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க் கள், தகுதி நீக்கத்தை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு விசாரணையில் உள்ளது. எனினும், சட்டசபை செயலகம் அறிவித்தபடி, 18 எம்.எல்.ஏ.,க்கள் பதவி, காலியாக இருந்தது.

நேற்று காலை, திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., போஸ் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 116 ஆக குறைந்துள்ளது. காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை, 19 ஆக உயர்ந்துள்ளது.


திருப்பரங்குன்றம் தொகுதிக்கு, ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், இரண்டாவது முறையாக, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 'எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லும்' என, தீர்ப்பு வந்தால், 19 தொகுதிகளுக்கும் சேர்த்து, தேர்தல் நடத்தப்பட வேண்டும்; இல்லையெனில், திருப்பரங்குன்றத்துக்கு மட்டும் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.இதனால் தற்போதைக்கு ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை .