ஐஆர்சிடிசி இணையதளத்தில் இந்தி திணிப்பு.. ரயில் பயணிகள் கடும் அதிருப்தி

Share:
ஐஆர்சிடிசியின் இணையதளத்தின் ஆங்கிலப் பதிப்பில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதற்கு ரயில் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஐஆர்சிடிசியானது புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான இணையதளம் இது. இதில் ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே இருக்கிறது. இந்தியாவின் பிற தேசிய மொழிகளுக்கு இங்கு இடமில்லை. இங்குதான் சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது இந்தியில் தனியாக வசதியை ஏற்படுத்தியுள்ள ஐஆர்சிடிசி, ஆங்கிலப் பதிப்பிலும் இந்தியைத் திணித்து தனது புத்தியைக் காட்டியுள்ளது. 
Train passengers up in the arms against Hindi imposition in IRCTC website
ஊர்ப் பெயரை பதிவிடும் பகுதியில் நாம் செல்ல வேண்டிய இடத்தின் பெயரைத் தேர்வு செய்தால் முதலில் இந்தியிலும், பிறகு ஆங்கிலத்திலும் பெயர் வருகிறது. ஏற்கனவே தனியாக ஒரு இந்திப் பதிப்பு இருக்கும்போது ஆங்கிலப் பதிப்பில் ஏன் தேவையில்லாமல் இந்தியைப் புகுத்தியுள்ளனர் என்று பயணிகள் கடுப்பாக கேட்கின்றனர். 

இந்தி மட்டுமே தெரியும் என்று இருப்போருக்கு தனியாக இந்திப் பதிப்பு இருக்கிறதே, பிறகு ஏன் ஆங்கிலத்திலும் கொண்டு வந்து இந்தியைத் திணிக்கிறார்கள் என்பது ரயில்வே பயணிகளின் கேள்வியாகும். தமிழ்நாட்டில் ஆட்சி மொழிச் சட்டம் 1976 பொருந்தாது. ஆட்சி மொழிச் சட்டம் 1976ன் கீழ் தமிழகம் சி பிரிவின் கீழ் வருகிறது. இந்தி தேசிய மொழியும் கிடையாது. 

எனவே சம்பந்தமே இல்லாமல் தமிழக ரயில் பயணிகளிடையே இந்தியைத் திணித்துள்ளனர். எனவே இந்த இந்தித் திணிப்பை உடனடியாக கைவிட கோரிக்கை எழுந்துள்ளது. ரயில்வே அமைச்சகம், டிக்கெட் முன்பதிவுக்கான வேலையை மட்டுமே ஐஆர்சிடிசி பெற்றுள்ளது. இந்தியைப் பரப்புவது இதன் வேலை அல்ல. 

எனவே உடனடியாக இந்தித் திணிப்பை கைவிட்டு விட்டு தமிழ் உள்ளிட்ட பிற பிராந்திய மொழி பதிப்புகளை ஐஆர்சிடிசி கொண்டு வர வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கம், ஐஆர்சிடிசிக்கு ஒரு கடிதமும் அனுப்பியுள்ளது.