பேருந்து..சினிமா தியேட்டர்..மால்.. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடம் எது?

Share:
இந்தியாவில், பேருந்துகளில் பயணம் செய்வதற்கு பயமும், பேருந்து பயணம் பாதுகாப்பற்றது, ஆபத்தானது என்று நினைப்பவர்களில் 47% பேர் நகரத்தில் வசிப்பவர்கள். 40% பேர் கிராமத்தில் வசிப்பவர்கள்.இந்தியாவில் நகரமோ.. கிராமமோ பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியான விஷயமாகவே உள்ளது. கிராமத்தில் உள்ள பெண்களுக்கு வன்கொடுமைகள் அதிகரிக்கிறது என்றால் நகரத்தில் உள்ள பெண்கள் தெருவில்கூட இரவில் பாதுகாப்பாக நடக்க முடியாத சூழல். பெண்கள் பாதுகாப்பு சார்ந்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை தொடர்பாக ஒரு மணி நேரத்துக்கு 26 (அதாவது சராசரியாக ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும்) வழக்குகள் பதிவுசெய்யப்படுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, 2015-ம் ஆண்டில் மட்டும் 34,651 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் 4,437 பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2005 முதல் 2014 வரை பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளின் சதவிகிதம் 34% அதிகரித்திருக்கிறது.

2015-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தான் அதிக அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டில், தமிழகத்தில் 5,847 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு மட்டும் 16,695 பெண் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் 60 முதல் 90% வரை அதிகபட்சமாக 17 முதல் 19 வயதுடைய சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். 

வளர்ந்து வரும் டிஜிட்டல் இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. 'தூய்மை இந்தியா' திட்டத்தின்கீழ் வீடுதோறும் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 வழங்கி வருகிறார்கள். ஆனால், அந்த நிதியைப் பெறுவதில் சிக்கல் நீடித்துதான் வருகிறது. இருந்தும் இந்தியா முழுவதும் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவோரின் 49.84% பெண்கள். இதில் கிராமத்தில் வசிப்பவர்கள் 67.32 சதவிகிதமும், நகரத்தில் வசிப்பவர்கள் 12.63 சதவிகிதமும் அடங்கும்.


சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் கூட்டமாக உள்ள பொது இடங்களில் இருக்கும் ஐந்தில் மூன்று பெண்கள் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர். இதில் 21 வயதுக்குட்பட்ட பெண்கள், போக்குவரத்து இடம், உள்ளூர் சந்தை, பள்ளி, கல்லூரி, பிரைவேட் டியூஷன், பள்ளிக்குச் செல்லும் பாதை, மக்கள் கூடும் பொது இடம் ஆகிய இடங்களில் தனக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகின்றனர். மக்கள் கூடும் பொது இடங்களை விட அதிக ஆபத்தும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதும் பேருந்துகளிலே, பேருந்துகளில் பயணம் செய்வதற்குப் பயமும், பேருந்து பயணம் பாதுகாப்பற்றது, ஆபத்தானது என்று நினைப்பவர்களில் 47% பேர் நகரத்தில் வசிப்பவர்கள். 40% பேர் கிராமத்தில் வசிப்பவர்கள். 


இன்னும் சிலப் பெண்கள் 'சமூக வலைதளங்கள், இணையதளங்கள் மூலமாகவே நாங்க படம் பார்க்கிறோம். இ-ஷாப்பிங் பண்ணுகிறோம். இந்த சினிமா தியேட்டர் / ஷாப்பிங் மால் செல்வது எல்லாம் பாதுகாப்பானது இல்லை' என்று நினைப்பவர்கள். அதில் அதிகமாக நகர் பகுதியில் வசிக்கும் 25 சதவிகிதம் பேர் கூறுகின்றனர்.அதேபோல், கிராமப் பகுதியில் வசிப்பவர்களில் 18 சதவிகிதம் பேர் பாதுகாப்பற்றது என்று கூறுகின்றனர். 

இதேபோல், உள்ளூர் கடைகளுக்கு செல்வது, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதும் பாதுகாப்பற்றதே என்று கூறுபவர்கள், பெற்றோர்களுடன் இருக்கும்போது, கிராமப்பகுதியில் 96% பேரும், நகர் பகுதியில் 91% பேரும் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகின்றனர். அதேபோல், நண்பர்களுடன் இருக்கும்போது 29% நகர்ப்பகுதி பெண்களும், 22% கிராமப்பகுதி பெண்களும் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதுகின்றனர். மேலும், காவலர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், காவல் நிலையத்திலும், பாலியல் வன்கொடுமை, மிரட்டல், பாலியல் பலாத்காரம் போன்றவை நடைபெறுகிறது என்று பலர் கூறி வந்தாலும், உள்ளூர் காவல்துறை நிலையங்களில் இருக்கும்போது 19% நகரத்தில் வசிப்பவர்களும், 20% கிராமத்தில் வசிப்பவர்களும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறுகின்றனர். 

பெண்கள் எந்த விதமான வன்முறைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்று எடுத்துக் கொண்டால், அதிகமாக உடல் மீதான வன்முறை, பாலியல் வன்முறை, மன உளைச்சல் போன்றவை. மதம், இனம், படிப்பு, சம்பளம் என்று எந்தவிதப் பாகுபாடும் இன்றி வன்முறைக்கு உள்ளாகின்றனர். அதிலும் குறிப்பாக இவர்களுக்குத் தொல்லை தருவது பெரும்பாலும், உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்களே. உலகளவில் மூன்றில் ஒரு பெண் தனக்கு நெருக்கமானவர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார். 

இது போன்று பாலியல் துன்புறுத்தலினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பிறரிடமே அல்லது நண்பர்கள், குடும்பத்தாருடன் பகிர்ந்துக் கொள்ளாதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் மற்றவர்கள் தவறாக பேசுவார்கள் என்ற பயத்தோடு நகரத்தில் வசிக்கும் 35% பெண்களும், கிராமத்தில் வசிக்கும் 20% பெண்களும் உள்ளனர். தவறாக மற்றவர்கள் பேசுவதைக் காட்டிலும், சொல்லாமல் இருப்பதே நல்லது என்று விட்டு விடுகின்றனர். மேலும், இதுபற்றி வீட்டில் சொன்னால் அவர்கள் திட்டுவார்கள் என்று நகரப்பகுதியில் 44%, கிராமப்பகுதியில் 33% பெண்கள் நினைக்கிறார்கள். அதையும் மீறி வீட்டில் சொல்லிவிட்டால் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. வேலைக்கு/பள்ளிக்கு எங்கும் செல்லக் கூடாது என்று சொல்லிவிடுவார்கள் என்று பலர் நினைக்கின்றனர்.


அதிலும் குறிப்பாக நகரத்தில் வசிக்கும் 28% பெண்களும், கிராமத்தில் வசிக்கும் 18% பெண்களும், தனக்கு உடனே திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று நினைத்து எதையும் பகிர்ந்து கொள்வதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றனர். அதனையும் தாண்டி, மற்ற காரணமாக சொன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றும் பலர் இருக்கின்றனர். 

பல்வேறு இடங்களில் வன்முறைகள், பாலியல் பலாத்காரம் என்று பல்வேறு கொடுமைகள் நிகழ்வதால் யாரை நம்புவது என்றே தெரிவதில்லை. இதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூட சரிவர யாரும் நல்ல முறையில் பேசி பழகுவதில்லை. கிராமத்தில் மற்றும் நகரத்தில் வசிக்கும் 95 சதவிகிதம், 21 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றவர்களுடன் பள்ளி, கல்லூரி, கல்வி, பணியிடம் போன்ற இடங்களில் தான் அதிகளவில் பேசி பழக முடிகிறது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 


அதேபோல், கடைகள், சந்தைக்குச் செல்லும்போது 33 சதவிகிதமும், நண்பர்களைச் சந்திக்கும்போது 41 சதவிகிதம் சுதந்திரமாகப் பேசி பழக முடிகிறது என்று நகரத்தில் வசிக்கும் பெண்கள் கூறுகின்றனர். அதேபோல், விளையாட்டு மைதானம், காலையில் நடைப்பயிற்சிக்கு செல்லும்போது 15 சதவிகிதமும், திறந்த வெளியில் மலம் கழித்தலுக்கு செல்லும் போது 10 சதவிகிதமும் மற்றவர்களுடன் பேச முடிகிறது என்று கிராமப்பகுதியில் வசிக்கும் பெண்கள் கூறியுள்ளனர். 

பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறைகள் ஒழித்து குற்றங்களைத் தடுப்பது எப்படி என்ற ஆலோசித்து, அதற்கான திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும். இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்று உலக அரங்கில் புள்ளிவிவரங்களோடு சர்வே முடிவுகள் வரத்துவங்கும் வேளையில் இந்த புள்ளிவிவரங்களும் கவலை அளிக்கின்றன. ஒரு பெண் படித்து வேலைக்கு செல்வது ஒரு தலைமுறை வேலைக்கு செல்வதற்கு சமம் என்கிறார்கள். இந்தியாவில் 50 கோடி தலைமுறைகளை பாதுகாப்பது அரசின் கடமை.