தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலம்

Share:
ஊழல் மிகுந்த மாநிலம் தமிழகம்; இந்த ஊழலை அகற்ற பாஜக நிர்வாகிகள் உறுதியேற்க வேண்டும்' என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா வரும் 2019-இல் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். இதற்காக தமிழகப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சென்னைக்கு திங்கள்கிழமை அவர் வந்தார்.
பொறுப்பாளர்களுடன் தனித் தனியே ஆலோசனை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்க கடற்கரை அரங்கில் பாஜகவின் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 41 நாடாளுமன்ற தொகுதிப் பொறுப்பாளர்களுடன் தனித் தனியாக ஆலோசனை நடத்தினார். 
15,000 பேர் முன்னிலையில்...: பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில், பாஜகவில் ஐந்து வாக்குச்சாவடிக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் நியமிக்கப்பட்டுள்ள சக்தி கேந்திரம், மகா சக்தி கேந்திர நிர்வாகிகள் 15,000 பேர் முன்னிலையில் அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் நமது எதிரணியினர் கிண்டலும், கேலியும் செய்கின்றனர். தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என்று அவர்கள் கிண்டல் செய்கின்றனர். இந்த முறை வந்துள்ளபோதும், கிண்டல் செய்துள்ளனர். அவர்களுக்கு, வரும் விருந்தினரை காத்திருந்து வரவேற்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்ற திருக்குறளை நினைவுகூற விரும்புகிறேன்.
வலிமை மிக்க கட்சியாக...: இப்போது இங்கே கூடியிருக்கும் பாஜக நிர்வாகிகளின் எண்ணிக்கை மட்டுமே 15 ஆயிரம் என்றிருக்கும் நிலையில், 2019 மார்ச் மாதத்துக்கு முன்பாகவே தமிழகத்தில் பாஜக எங்கிருக்கிறது என்பதை அந்த எதிரணியினர் நிச்சயம் தெரிந்து கொள்வர். நிச்சயமாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வலிமை மிக்க கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியாது: கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ், ரூ. 12 லட்சம் கோடி ஊழலில் சிக்கியுள்ளது. அந்தக் கட்சியின் பெரிய தலைவர்கள் சிறைச்சாலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் சொல்ல முடியாது.
தமிழகத்தை மீட்கும் பொறுப்பு உள்ளது: தமிழகத்தின் நிலையைப் பார்க்கும் போது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. எனவே, நாம் தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொண்டுவர உறுதியேற்க வேண்டும். தேர்தலில் ஊழல், ஓட்டுக்குப் பணம் என்ற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. 
வாக்காளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்: மேலும் மத்திய திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ரூ. 1.35 லட்சம் கோடி, சிறு பாசன வசதிகளுக்காக ரூ. 332 கோடி, மெட்ரோ திட்டத்துக்காக ரூ. 2,275 கோடி, மோனோ ரயில் திட்டத்துக்கு ரூ. 3,267 கோடி, 3200 கி.மீ. ரயில் பாதைத் திட்டத்துக்காக ரூ. 2,000 கோடி, பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்காக ரூ. 3,694 கோடி எனப் பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த 4 ஆண்டு ஆட்சியில் ரூ. 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி நிதியை தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. ஆனால், 70 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் தமிழகத்துக்கு இந்த அளவிலான திட்டங்களையோ, நிதியையோ ஒதுக்கவில்லை. 
தமிழ் புறக்கணிப்பு-பொய் பிரசாரம்: மேலும், தமிழ் மொழியைப் புறக்கணிப்பதாக பாஜக குறித்து பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ரயில் டிக்கெட்டுகள் தமிழ் மொழியில் அச்சிடப்படுவதைக் கொண்டுவந்ததே பாஜக அரசுதான். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், தமிழ் மொழியை நாடு முழுவதும் முன்னிலை பெற வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 
தமிழகத்துக்குக் கூடுதல் நிதி: தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, 13-ஆவது நிதி ஆணையத்தில் தமிழகத்துக்கு ரூ. 94,540 கோடி நிதியை மட்டுமே ஒதுக்கியது. ஆனால், பாஜக அரசு 14-ஆவது நிதி ஆணையத்தில் தமிழகத்துக்கு 1,99,096 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. அதாவது 1,04,000 கோடி கூடுதலாக தமிழகத்துக்கு மோடி அரசு ஒதுக்கியுள்ளது.
யாருடன் கூட்டணி?: தமிழகத்தில் பாஜக எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கப்போகிறது என கேள்வி எழுப்புகின்றனர். ஊழலை ஒழிக்க உறுதியேற்கும், ஊழலற்ற ஆட்சியைத் தர முன்வரும் கட்சியுடன்தான் பாஜக கூட்டணி வைக்கும் என்றார் அமித்ஷா.
நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், முரளிதரராவ், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பாஜக முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்