கோஹ்லி சாதனை... இந்தியா வேதனை

Share:
அதிவேகமாக 3000 ரன்கள் எடுத்த கேப்டன்களில் முதலிடத்தை பிடித்து கோஹ்லி சாதனை படைத்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் கோப்பையை இந்தியா கோட்டை விட்டது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்தது. 

இங்கிலாந்து சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற தொடர் 1–1 என சமனில் இருந்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று லீட்சில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் லோகேஷ் ராகுல், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர்.

ரோகித் ‘அவுட்’

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. பேட்டிங்கில் திணறிய ரோகித் சர்மா, 18 பந்தில் 2 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். 2015 உலக கோப்பை தொடருக்குப் பின் இடது கை வேகப்பந்து வீச்சாளரிடம் (வில்லே) இவர், 9 வது முறையாக அவுட்டானார்.44 ரன்கள் எடுத்த ஷிகர் தவான் ரன் அவுட்டானார்.

கோஹ்லி ஆறுதல்

தினேஷ் கார்த்திக் வந்த வேகத்தில் பவுண்டரிஅடித்துரன் கணக்கைத் துவக்கினார். கோஹ்லி ஒருநாள் அரங்கில் 36வது அரைசதம் அடித்தார்.ரஷித், பிளங்கட் பந்துகளில் பவுண்டரி அடித்து வேகம் காட்டிய தினேஷ் கார்த்திக், 21 ரன்னுக்கு, ரஷித் ‘சுழலில்’ போல்டானார். இந்த ஜோடி இந்திய அணிக்கு நம்பிக்கை தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஷித் ‘வலையில்’ சிக்கினார்கோஹ்லி (71). இதேஓவரின் கடைசி பந்தில் ரெய்னாவும் (1) அவுட்டானார்.

தோனி ஏமாற்றம்

பாண்ட்யா 21 பந்தில் 21 ரன்கள் எடுத்தார்.பந்துகளை வீணடித்த தோனி ஆமை வேகத்தில் ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் சற்று ஆக்ரோஷம் காட்டுவார் என நம்பிய நிலையில், 42 ரன்னுக்கு அவுட்டானார்.புவனேஷ்வர் (21) அவுட்டாக இந்திய அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்தது. 2 சிக்சர் அடித்து கைகொடுத்த ஷர்துல் தாகூர் (22) அவுட்டாகாமல் இருந்தார்.

ரூட் அபாரம்

எளிய இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோவ் (30 ரன், 13 பந்து) சூப்பர் துவக்கம் தந்தார். வின்ஸ் (27) கைவிட்ட போதும் ஜோ ரூட் 29வது, மார்கன் 39வது அரைசதம் எட்டினர். இந்த ஜோடியை பிரிக்க கோஹ்லி எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. பீல்டிங்கும் சொதப்பலாக இருந்தது. ஜோ ரூட் 13வது சதம் அடித்தார். முடிவில், இங்கிலாந்து அணி 44.3 ஓவரில் 2விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 1–2 என தொடரை இழந்தது. மார்கன் (88), ஜோ ரூட் (100) அவுட்டாகாமல் இருந்தனர்.

‘முதல்’ தோல்வி

கடந்த 2016ல் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா (1–4) ஒருநாள் தொடரை இழந்தது. பின் ஜிம்பாப்வே (3–0), நியூசிலாந்து (3–2, 2–1), இங்கிலாந்து (2–1), வெஸ்ட் இண்டீஸ் (3–1), இலங்கை (5–0, 2–1), ஆஸ்திரேலியா (4–1) மற்றும் தென் ஆப்ரிக்கா (5–1) அணிகளுக்கு எதிராக தொடர்ந்து 9 ஒருநாள் தொடர்களை வென்றது. இரு ஆண்டுக்குப் பின் தற்போது முதன் முறையாக தோற்றது.

சகால் ‘நோ–பால்’

‘நோ–பால்’ வீசுவது சகாலுக்கு வழக்கமாகி போனது. தோனி, ஜோ ரூட்டை 69 ரன்னில் ‘ஸ்டம்டு’ செய்தார். ஆனால், சகால் வழக்கம் போல காலை கிரீசிற்கு வெளியே வைத்து ‘நோ பால்’ வீசியது ‘ரீப்ளேயில்’ தெரியவர, இந்திய ரசிகர்கள் சோர்ந்தனர்.

ஆக. 1ல் டெஸ்ட்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் வரும் ஆக. 1ல் பர்மிங்காமில் துவங்குகிறது.

3000

கேப்டனாக களமிறங்கிய பின் ஒருநாள் அரங்கில் 1000 (17 இன்னிங்ஸ்), 2000 (36 இன்னிங்ஸ்) ரன்களை அதிவேகமாக எட்டியவர் கோஹ்லி. நேற்று மூன்றாவது போட்டியில் 19 ரன்கள் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 3000 ரன்கள் எடுத்த கேப்டன்களில், தோனி, டிவிலியர்சை முந்தி ‘நம்பர்–1’ இடம் பெற்றார் இந்தியாவின் கோஹ்லி. இவர் 49 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டினார். அடுத்த இரு இடத்தில் டிவிலியர்ஸ் (60 இன்னிங்ஸ், தெ.ஆப்.,), தோனி (70 இன்னிங்ஸ்) உள்ளனர். 

1

ஒருநாள் அரங்கில் 203 இன்னிங்சில் களமிறங்கிய கோஹ்லி, முதன் முறையாக ‘லெக் ஸ்பின்னர்’ பந்தில் (அடில் ரஷித்) போல்டானார்.

2

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் 10 ஓவரில் 32 ரன்கள் மட்டும் எடுத்தது. கடந்த 2016 ஜூன் மாதத்துக்குப் பின் பங்கேற்ற 45 போட்டிகளில் இந்தியா எடுத்த இரண்டாவது குறைந்த ஸ்கோர் (முதல் 10 ஓவரில்) இது தான். கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான தர்மசாலா போட்டியில் 11/3 ரன்கள் (டிச., 2017) எடுத்திருந்தது.

2

லீட்ஸ் போட்டியின் 1, 5 வது என, இரண்டு ஓவரை ‘மெய்டனாக’ (ரன் இல்லாமல்) வீசினார் இங்கிலாந்தின் மார்க் உட். ஒருநாள் அரங்கில் இவர் இப்படி பவுலிங் செய்தது இது தான் முதன் முறை.

13

கடந்த 2013ல் ஒருநாள் அணிக்கு தலைமை ஏற்கத் துவங்கினார் கோஹ்லி. இதுவரை 52 போட்டிகளில் கேப்டனாக களமிறங்கினார். இதில் 13 சதம், 13 அரைசதம் அடித்துள்ளார். சராசரி 83 ரன் ஆக உள்ளது. 

106.1

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 31.6 வது ஓவரில் இந்தியாவின் ரோகித் சர்மா சிக்சர் அடித்தார். இதன் பின் 2வது மற்றும் நேற்று நடந்த 3வது போட்டியும் சேர்த்து, 106.1 ஓவர்கள் விளையாடிய இந்திய வீரர்கள் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. நேற்று 48.1 வது பந்தில் ஒரு வழியாக ஷர்துல் தாகூர் சிக்சர் அடித்து ஆறுதல் தந்தார்.

186

நேற்று மார்கன், ஜோ ரூட் இணைந்து 186 ரன்கள் எடுக்க, லீட்ஸ் மைதானத்தில் மூன்றாவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடியானது. இதற்கு முன் ஜெயவர்தனா, சங்ககரா (இலங்கை) இணைந்து 159 ரன்கள் எடுத்தனர்.

* இந்தியாவுக்கு எதிராக 3வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற பெருமையும் பெற்றது. இதற்கு முன் 2011 உலக கோப்பை தொடரில் ஸ்டிராஸ், இயான் பெல் ஜோடி 170 ரன்கள் எடுத்தது.