"அதிர்ச்சி" தகவல் - பேரிடர் பயிற்சியின் போது மாணவியை தள்ளிவிட்டவர் போலி பயிற்சியாளர்

Share:
கோவை அருகே கல்லூரியில் 2வது மாடியில் இருந்து மாணவியை தள்ளி விட்டவர், பேரிடர் மேலாண்மைப் பயிற்சியாளர் போர்வையில் 6 ஆண்டு காலமாக பல்வேறு கல்லூரிகளில் மோசடியில் ஈடுபட்டு வந்தது போலீசார் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.

மாணவி லோகேஸ்வரியின் மரணத்தை தொடர்ந்து, அதுகுறித்து விசாரிக்க, பேரூர் காவல் ஆய்வாளர் மனோகரன், ஆலாந்துறை காவல் ஆய்வாளர் தங்கம் ஆகியோரைக் கொண்ட தனிப்படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி அமைத்தார்.

இந்த தனிப்படையினர் ஆறுமுகம் தொடர்பான விவரங்களை திரட்டியதில், நெல்லையை சேர்ந்த அவன், சென்னை கேளம்பாக்கத்தில் வசித்து வந்தது கண்டறியப்பட்டது. மேலும் கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு கல்லூரிகளில் அனுமதியைப் பெற்று அவன் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதற்காக, பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுப்புவது போல கடிதங்களை அனுப்பி, ஆணையத்தின் சார்பில் பயிற்சியாளர் என்ற பெயரில் கல்லூரிகளுக்கு சென்று பேரிடர் மேலாண்மை தொடர்பாக பயிற்சிகள் அளித்து வந்துள்ளான். மேலும், பயிற்சியில் பங்கு பெறும் மாணவ-மாணவிகள் அதற்கான சான்றிதழை 50 ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்றும், வேலைவாய்ப்புக்காக அதை பதிவுசெய்துகொள்ளலாம் என்றும் கூறி மோசடி நாடகத்தை அரங்கேற்றி வந்துள்ளான்.

ஆறுமுகம் கல்லூரி நிர்வாகங்களுக்கு அனுப்பியவை அனைத்தும் போலி கடிதங்கள் என்று தெரிவித்துள்ள போலீசார் தொடர்ந்து தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.