கோவை கள்ளநோட்டு கும்பலுடன் எடப்பாடி பழனிசாமி! - அதிர்ச்சியளித்த புகைப்படம்

Share:
கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த், தமிழக முதல்வர் #எடப்பாடி பழனிசாமியுடன் எடுத்துள்ள புகைப்படம், கோவை அ.தி.மு.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை, வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர், சுந்தர் மற்றும் கிதர் முகமது ஆகியோருடன் இணைந்து, கலர் ஜெராக்ஸ் மூலம், கோடிக்கணக்கான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளார். போலீஸாரின் வாகனத் தணிக்கையின்போது கள்ளநோட்டு விவகாரம் வெளியில் வந்தது. இதையடுத்து, ஆனந்த் மற்றும் கிதர் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 
மேலும், கள்ளநோட்டு அச்சடிப்பதற்காகப் பயன்படுத்திய அலுவலகத்தில் இருந்து, 1.18 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹவாலா நெட்வொர்க் மூலம், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்களை குறிவைத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்தக் கள்ளநோட்டு கும்பலின் தலைவனான சுந்தர், நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த், தமிழக முதல்வர் #எடப்பாடி #பழனிசாமியுடன் எடுத்துள்ள படம் வெளியாகியுள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில், கடந்த ஆண்டு ஆதியோகி சிலையை திறந்து வைப்பதற்காக, பிரதமர் மோடி வந்தபோது இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் கோவை விநியோகஸ்தர் ஆத்மா சிவக்குமார் மூலம், முதல்வரைச் சந்தித்துள்ளார் ஆனந்த். இதனால், கள்ளநோட்டு வழக்கு முறையாக நடக்குமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் புகைப்படம் எடுத்துள்ள ஆனந்த் மீது, டூ வீலர் திருட்டு வழக்கு, செயின் பறிப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன