காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகாவுக்கு புதிய உத்தரவு

Share:
காவிரி மேலாண்மை ஆணையத்தில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர்களை வரும் 12ம் தேதிக்குள் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் வழங்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசிதழில் ஆணையம் 


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடந்த பெரும் போராட்டத்தின் இறுதியில், தண்ணீர் பங்கீட்டை கையாளுவதற்காக, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டன. இதற்கான அறிவிப்பு, சமீபத்தில் மத்திய அரசின் அரசிதழில், அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. 

காலதாமதம்

இதையடுத்து, தமிழக அரசின் சார்பில், 'மேலாண்மை ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராக, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் பிரபாகரும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உறுப்பினராக, திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர், செந்தில்குமாரும் செயல்படுவர்' என அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து முறையான தகவல், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து புதுச்சேரி அரசின் சார்பிலும், கேரள அரசின் சார்பிலும் உறுப்பினர் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. கர்நாடகா மட்டுமே, இந்த விஷயத்தில், உறுப்பினர் பெயரை பரிந்துரைக்காமல், தொடர்ந்து தாமதித்து வந்தது.

உத்தரவு
இந்நிலையில், காவிரி நிதிநீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர்களை, வரும் 12ம் தேதிக்குள் நீர்வளத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என கர்நாடக அரசிற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.