தமிழக அமைச்சா்கள் ஜனாதிபதியிடம் ஆட்சியை ஒப்படைக்கலாம்

Share:
தமிழகத்தில் உள்ளாட்சி அதிகாரிகளே போதும் என்றால் மாநில அமைச்சா்கள் பதவி விலகிவிட்டு ஜனாதிபதியிடம் ஆட்சியை ஒப்படைக்கலாமே என்று முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம் கருத்து தொிவித்துள்ளாா். 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் ஆட்சி காலம் கடந்த 2016ம் ஆண்டே நிறைவடைந்து விட்டது. இருப்பினும் தற்போது வரை தொகுதி மறுவரையறை என்ற வாா்த்தையை பயன்படுத்தி தமிழக அரசு உள்ளாட்சி தோ்தல்களை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. 

மேலும் உள்ளாட்சி தனி அதிகாாிகளை நியமனம் செய்து மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் முறையாக கள ஆய்வு மேற்கொண்டு உள்ளாட்சி பணிகள் மேற்கொள்ளப்படுவது இல்லை. இதனால் மக்கள் யாரிடம் தங்களது கோாிக்கைகளை தொிவிப்பது என்று தொியாமல் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனா். 

நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில் உள்ளாட்சி துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதகாலம் நீட்டிப்பு செய்து சட்டதிருத்த தீா்மானம் ஒன்றை தாக்கல் செய்தாா். 

இந்த தீா்மானத்திற்கு எதிா்க்கட்சிகள் பலவும் எதிா்ப்பு தொிவித்துள்ளன. இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம் இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், “தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை, தனி அதிகாரிகளே போதும் என்றால், தமிழக அரசை ஏன் மக்கள் பிரதிநிதிகள் நடத்த வேண்டும்?”

“அஇஅதிமுகவிற்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி மீது நம்பிக்கை இல்லையென்றால், தமிழ்நாடு அரசில் ஏன் அமைச்சர்கள் இருக்க வேண்டும்?”

“தமிழ்நாடு அமைச்சர்கள் பதவி விலகி அதிகாரிகளிடம் (ஜனாதிபதி ஆட்சி) ஆட்சியை ஒப்படைக்கலாமே?”