பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதில் முதல் பரிசு பெற்ற அமித் ஷா

Share:
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இந்தியாவிலேயே அதிக நோட்டுகளை மாற்றியது அமித் ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கி என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, வாழ்த்துகள் அமித் ஷா ஜி, நீங்கள் இயக்குநராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கிதான், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அதிக அளவு பணத்தை அதாவது ரூ.750 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை 5 நாட்களில் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி முதல் பரிசு பெற்றுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை சிதறி சின்னாபின்னமான நிலையில், இந்த மிகப்பெரிய சாதனையை புரிந்த உங்களுக்கு எனது சல்யூட் என்று பதிவிட்டுள்ளார்.

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இயக்குநராக பதவி வகித்துவரும் ஆமாதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தங்களிடம் உள்ள அத்தகைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது.

அதைத் தொடர்ந்து, பல்வேறு வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கூட்டம் அலை மோதியது.

அப்போது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் அல்லாமல் மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பெற்று வந்தன.

ஆனால், கூட்டுறவு வங்கிகளில் பல முறைகேடுகள் நடப்பதாகப் புகார் எழுந்ததை அடுத்து, அந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி முதல் அத்தகைய வங்கிகளில் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது.

எனினும், நவம்பர் 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் மொத்தம் ரூ.754.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இது இதர மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகையைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும்.

மனோரஞ்சன் எஸ். ராய் என்பவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவலை அளிக்கக் கோரி விண்ணப்பித்திருந்தார்.

அவரது கேள்விக்கு, வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் தலைமை பொது மேலாளரும், மேல்முறையீட்டு அதிகாரியுமான எஸ்.சரவணவேல் பதிலளித்தார். அந்த பதிலில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளது.

அந்த வங்கியின் தலைவராக கடந்த 2000-ஆம் ஆண்டு அமித் ஷா பதவி வகித்தார். அதையடுத்து, அந்த வங்கியின் இயக்குநராக பல ஆண்டுகளாக அவர் இருந்து வருகிறார்.

கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் பற்றிய ஆர்டிஐ தகவலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.