நான் படுகொலை செய்யப்படலாம்’ - ட்ரம்ப் உடனான சந்திப்புக்கு வடகொரிய அதிபர் அச்சம்

Share:
அமெரிக்க அதிபர் உடனான சந்திப்பின்போது தான் படுகொலை செய்யப்படலாம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அச்சம் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத சோதனையின் மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரியாமீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தது. இதைத்தொடர்ந்து அணு ஆயுத சோதனையை முற்றிலும் கைவிடுவதாக வடகொரிய அதிபர் கிம் அறிவித்திருந்தார். மேலும் அவர், அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேரில் சந்திக்கவும் விருப்பம் தெரிவித்திருந்தார். வடகொரிய அதிபரின் அழைப்பை ஏற்ற ட்ரம்ப் அவரைச் சந்திக்க சம்மதம் தெரிவித்தார். இந்த இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு உலகளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் வரும் ஜூன் 12-ம் தேதியன்று சிங்கப்பூர் செண்டோசா தீவில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் ஆலோசனை நடத்த உள்ளனர். இவர்களின் ஆலோசனைக்குப் பிறகு, பல பிரச்னைகள் முடிவுக்கு வரும் எனக் கருதப்படுகிறது. மேலும், இவர்களின் சந்திப்பை அடுத்து அந்த விடுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதிலும் இப்போதிலிருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில், சிங்கப்பூரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பின்போது தான் படுகொலை செய்யப்படலாம் என கிம் அச்சம் தெரிவிப்பதாக வடகொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்து உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த இரு தலைவர்களின் சந்திப்பு, முன்பு ஒருமுறை தடை செய்யப்பட்டு தற்போது மீண்டும் நடைபெறுவதுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கிம் ஜாங் உன்னின் இந்தக் கருத்து இவர்களின் சந்திப்பு நடக்குமா என்ற கேள்வியை அனைவரின் மத்தியிலும் எழுப்பியுள்ளது.