தனியார் துறை ஊழியர்களுக்கு மத்திய அரசு பணி

Share:
மத்திய அரசின் 10 துறைகளில் கூடுதல் செயலர் பதவிக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

விதிமுறைகள்

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், வருவாய்த்துறை, நிதித்துறை சேவை, பொருளாதார விவகாரம், விவசாயம் மறறும் விவசாயிகள் நலன், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, கப்பல்துறை, வனம் மற்றும் பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விமான போக்குவரத்து, பொருளாதார துறை அமைச்சகங்களில் கூடுதல் செயலர் பணிக்கு தனியார் நிறுவன ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விதிமுறைகளின்படி வயது வரம்பு ஜூலை 1 தேதிப்படி 40 க்குள் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உயர் கல்வி முடித்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பதவிக்காலம் 3 ஆண்டுகள். தேவைக்கேற்ப 5 வருடங்கள் வரை நீட்டிப்பு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, 1.44 லட்ச ரூபாயிலிருந்து 2.18 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதனுடன் படிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் துறை நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்களில் 15 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு நிர்ணயித்த தகுதிகளுடன், மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் பணிபுரியும் அதிகாரிகள், பொதுத்துறைநிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள், தன்னாட்சி பெற்ற அமைப்புகள், பல்கலை., அங்கீகாரம் பெற்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிபவர்களும் 15 ஆண்டுகள் அனுபவம் இருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.