டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தினால் 1 சதவீதம் தள்ளுபடி

Share:
மத்திய அரசின் தொடர் அறிவுறுத்தலை அடுத்து, டிஜிட்டல் முறையில், மின் கட்டணம் செலுத்துவோருக்கு, 1 சதவீத தள்ளுபடி வழங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.


மின் வாரியத்திற்கு, 2.88 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதில், இலவச மின் திட்டங்களில் வருவோர் தவிர்த்து, 1.50 கோடி பேர், மின் கட்டணம் செலுத்த தகுதி உடையவர்கள். மின் வாரியத்தின் கட்டண மையம், இணைய தளம், 'மொபைல் ஆப்' என்ற செயலி; அரசு, 'இ - சேவை' மையம், தபால் நிலையம் மற்றும் சில வங்கிகளில், மின் கட்டணத்தை செலுத்தலாம்.

விழிப்புணர்வு :

தமிழகத்தில், 48 லட்சம் பேர் மட்டுமே, டிஜிட்டல் முறையில், மின் கட்டணம் செலுத்துகின்றனர். இதை, ஒரு கோடியாக அதிகரிக்க, மின் கட்டண மையங்களுக்கு வரும் நுகர்வோரிடம், டிஜிட்டல் சேவை குறித்து, மின் வாரியம், விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கிறது. இந்நிலையில், டிஜிட்டல் முறையில், மின் கட்டணம் செலுத்துவோருக்கு, மொத்த கட்டணத்தில், 1 சதவீதம் தள்ளுபடி வழங்க, மின் வாரியம் முடிவு செய்து உள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க, அந்த சேவையை மேற்கொள்வோருக்கு சலுகை வழங்கும்படி, மத்திய அரசு, தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதன் நிலை குறித்து, மத்திய மின்துறை, அடிக்கடி ஆய்வும் நடத்துகிறது.
அறிவிக்கப்படும் :

அதனால், டிஜிட்டல் முறையில், மின் கட்டணம் செலுத்துவோருக்கு, 1 சதவீதம் வரை, கட்டண சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, மின்சார ஒழுங்குமுறை ஆணைய ஒப்புதல் பெற்ற பின், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.