விரும்பிய தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு மொபைல் நம்பரை மாற்றுவதில் வருது சிக்கல்

Share:
மொபைல் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவன சேவைக்கு மாறிக்கொள்ளும் என்என்பி வசதியை அளிக்கும் நிறுவனம், டிராயின் கட்டண குறைப்பு நடவடிக்கையால், உரிமத்தை புதுப்பிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதனால் எம்என்பி சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், நம்பரை மாற்றாமலேயே வேறு தொலைத்தொடர்பு நிறுவன சேவைக்கு மாற்றிக்கொள்ளும் என்என்பி வசதி நாடு முழுவதும் அமலில் உள்ளது. இதனால் ஒரு நிறுவனத்தின் சேவையில் குறைபாடு இருந்தால் எளிதாக வேறு நிறுவனத்துக்கு மொபைல் நம்பரை மாற்றி வந்தனர். இதுபோல், 90 நாட்களுக்கு ஒரு முறை நிறுவனங்களை மாற்றிக்கொ–்ள்ளலாம். இந்த சேவையை எம்என்பி இன்டர்கனெக்‌ஷன் டெலகாம் சொல்யூஷன்ஸ் மற்றும் சினிவர்ஸ் டெக்னாலஜீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் அளித்து வருகின்றன. 

இதற்கான உரிமம் இந்த நிறுவனங்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் வரை வழங்கப்பட்டுள்ளது. எம்என்பிக்கு கட்டணமாக ₹19 வசூலிக்கப்பட்டது. இது தற்போது ₹4ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நஷ்டம் ஏற்படுவதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.சமீபத்தில் இந்த நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறைக்கு கடிதம் அனுப்பின. அதில், எம்என்பி கட்டணம் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஏறக்குறைய 80 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. நிறுவனத்தை இயக்குவது சிரமமாக உள்ளது. எனவே, 2019 மார்ச் மாதம் உரிமம் முடிந்ததும் இதில் இருந்து விலகுவதை தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்டுள்ளன. ரிலையன்ஸ் நிறுவனம் 4ஜி சேவையை துவக்கிய பிறகு, தொலைத்தொடர்பு துறையில் கடும் போட்டி எழுந்துள்ளது. 

மற்ற நிறுவனங்களும் கட்டணத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்தை இது உருவாக்கியது. போட்டியை சமாளிக்க முடியாமல் நஷ்டம் அடைந்தன. வாடிக்கையாளர்களை தக்க வைக்க போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. கடும் நஷ்டத்தை சமாளிக்–்க முடியாமல் ஏர்செல் மூடப்பட்டது. இதில் இருந்த வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறினர்.

இதுபோன்ற காரணங்களால், சமீபகாலமாக மாதாந்திர எம்என்பி கோரிக்கைகள் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 37 கோடி என்என்பி கோரிக்கைகளை மேற்கண்ட 2 நிறுவனங்களும் கையாண்டுள்ளன. கடந்த மாதம் மட்டும் 2 கோடி எம்என்பி கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே, நஷ்டத்தில் இருந்து மீளும் வகையில், என்என்பி கட்டண குறைப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு அடுத்த மாதம் 4ம் தேதி விசாரணைக்கு வருகிறது.இதுகுறித்து இந்த நிறுவனங்கள் தரப்பில் கூறுகையில், மொபைல் எண் வேறு நிறுவனத்துக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டால் மட்டுமே கட்டணத்தை ஏற்க வேண்டும் என டிராய் கூறுகிறது. இதனால் ஏற்படும் நஷ்டத்தை தொடர்ந்து தாங்கிக்கொள்ள முடியாது என தெரிவித்தன. எம்என்பி இன்டர்கனெக் ஷன் நிறுவனம் உரிமத்தை ஒப்படைப்பதாக கூறி வருகிறது.

இதுகுறித்து தொலைத்தொடர்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மேற்கண்ட நிறுவனங்கள் தங்கள் உரிமத்தை புதுப்பிக்காமல் விலகிவிட்டால், என்என்பி சேவையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த நிறுவனங்களின் உரிமம் முடிவதற்கு முன்பே புதிய லைசென்ஸ் வேறு நிறுவனங்களுக்கு வழங்க முயற்சிகள் மேற்ெகாள்ளப்படும். இல்லாவிட்டால், ஏர்செல் போன்று நிறுவனங்கள் மூடப்பட்டால் வாடிக்கையாளர்கள் வேறுநிறுவனத்துக்கு மாற முடியாமல் பரிதவிக்க வேண்டிய நிலை உருவாகும்’’ என்றனர்.

* ஜனவரி முதல் மார்ச் வரை எம்என்பி கோரி வந்த விண்ணப்பங்கள் 37 கோடி
* நாட்டிலேயே அதிகபட்சமாக கர்நாடகாவில் 3.61 கோடி என்என்பி கோரிக்கைகள் வந்துள்ளன. ஆந்திரா 3.12 கோடி கோரிக்கைகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.
* எம்என்பி கட்டணத்தை ₹19ல் இருந்து ₹4ஆக குறைத்ததால் நஷ்டம் ஏற்படுவதாக நிறுவனங்கள் புகார்.