தேர்தலை குறிவைக்கும் மோடி: காத்திருக்கும் கவர்ச்சிகரத் திட்டங்கள்

Share:
2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி 50 கோடி இந்திய மக்கள் பயனடையும் மூன்று புதிய திட்டங்களை அறிவிக்கப்போகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது. 

மக்களைவைத் தேர்தல் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதன் அங்கமாக, பிரதமர் மோடி மூன்று புதிய கவர்ச்சிகரமான திட்டங்களை விரைவில் அறிவிப்பார் என்று தெரிகிறது. 
முதியோர் உதவித்தொகை, வாழ்நாள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான நலத்திட்டம் ஆகியவற்றை நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்பெறும் வகையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இத்திட்டங்கள் மூலம் நாட்டில் உள்ள 50 கோடி பொதுமக்கள் பயனடைய வாய்ப்புள்ளது. 

இத்திட்டங்களால் பாஜக எதிர்வரும் மக்களவை பொதுத்தேர்தலில் ஆதாயம் அடைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், இத்திட்டங்கள் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்றி, ஏற்கெனவே மோசமாக இருக்கும் நாட்டின் பொருளாதார நிலையை மேலும் சரிவை நோக்கி தள்ளும் அபாயமும் உள்ளது.

ஒப்பந்த மற்றும் நிரந்தர பணியாளார்கள் அனைவருக்கும் திட்டங்களின் பயன் கிடைக்க 15 தொழிலாளர் நலச் சட்டங்களையும் ஒருங்கிணைக்கும் சட்ட மசோதாவும் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான வரைவு மசோதாவும் தயார் செய்யப்பட்டுவிட்டது. ஜூலை மாதம் நடைபெறும் பாராளுமன்றக் கூட்டத்தில் இதனைத் தாக்கல் செய்ய திட்டமிட்டிருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் மோடி கேர் என்ற பெயரில் மாபெரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. இதுவே உலகின் மிகப்பெரிய மக்கள்நலத் திட்டம் என்றும் கூறப்பட்டது.

No comments