8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும்

Share:
இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாடு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வந்தன. ஆனால், தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஏகப்பட்ட, 'குட்டி' தலைவர்களை உருவாக்கி வருகிறது. இவர்கள் எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்ற பெயரில் மக்களுக்கு அழைப்பு விடுத்து, வன்முறைக்கு வித்திடுகின்றனர். 

8 வழி சாலை:

தற்போது இவர்களிடம் சிக்கி இருப்பது சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம். இந்த திட்டத்தினால், தமிழகத்தின் எதிர்காலமே நாசமாகி விடும் என்ற ரீதியில் பல்வேறு கட்டுக்கதைகளை உருவாக்கி வருகின்றனர். 
சென்னை - சேலம் இடையே 274 கி.மீ., துாரத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. 'இந்த சாலையால் ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்படும்; விளை நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவர்; காப்பு காடுகள் அழிக்கப்பட்டு, வனவிலங்குகள் கொல்லப்படும்; மலைகள் அழிக்கப்பட்டு சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கப்படும்' என்பது இந்த, 'குட்டி' தலைவர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். இந்த சாலை அமைய உள்ள பகுதிகளில் உள்ள கிராமங்களில் புகுந்து, அங்குள்ள மக்களிடம் இந்த கட்டுக்கதைகளை இவர்கள் அவிழ்த்து விடுகின்றனர். அவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளும், அவற்றின் உண்மை நிலவரமும் வருமாறு:

முதல் கட்டுக்கதை

*8 வழி சாலை, கிராமங்கள் மற்றும் விளை நிலங்கள் வழியாக அமைக்கப்படும். இதனால் சேலத்தில் மா விளைச்சல் பாதிக்கப்படும். 
*இந்த சாலை திட்டத்திற்கு 2,300 எக்டேர் நிலம் தேவைப்படும்.


உண்மை நிலவரம்:

*இந்த சாலையின் மொத்த துாரம் 274 கி.மீ., ஒட்டு மொத்த சாலையும் கிராமங்கள் மற்றும் விளை நிலங்கள் வழியாக அமைய போவது இல்லை. பெரும்பான்மையான சாலை, பயன்படுத்தப்படாத நிலம் வழியாகத் தான் செல்லப் போகிறது.

* இந்த சாலைக்கு, 1,900 எக்டேர் நிலம் தான் தேவை. இதில் 400 எக்டேர் தான் விளை நிலம். மற்றொரு 400 எக்டேர் அரசு நிலம். மற்றவை ஒரு காலத்தில் விவசாயம் செய்யப்பட்ட நிலம். 

*உதாரணத்திற்கு, இந்த சாலை செல்லும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.15 லட்சம் எக்டேரில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் 8 வழி சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள விவசாய நிலம், தற்போது விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரும் பகுதியில் 1 சதவீதம் மட்டுமே. அதாவது, 100 எக்டேர் விளை நிலம் மட்டுமே இந்த சாலைக்காக கையகப்படுத்தப்பட உள்ளது. 

2வது கட்டுக்கதை:

* 8 வழி பசுமை சாலை, 900 அடி அகலம் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது.

உண்மை நிலவரம்:

இந்த சாலை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையில், ' 90 மீட்டர் அகலம் அல்லது 256 அடிக்கு சற்று அதிகமான அகலத்தில் சாலை அமைக்கப்படும்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு வழி சாலை என்பது 23.5 மீட்டர் அகலத்திலும், ஆறு வழி சாலை என்பது 43.6 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. 8 வழி சாலை 90 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டாலும், சர்வீஸ் ரோடுகளும் அதற்குள் அடங்கும் என்பது தான் விதிமுறை.

3வது கட்டுக்கதை:

* 8 வழி சாலை திட்டம், 22 கி.மீ., துாரத்திற்கு காப்பு காடுகளை ஊடுருவி அமைக்கப்பட உள்ளது.

உண்மை நிலவரம்:

இந்த சாலை திட்டம், காப்பு காடுகளில் 10 கி.மீ., துாரம் தான் ஊடுருவி செல்ல உள்ளது. அத்துடன் பாதுகாக்கப்பட்ட சுற்றுசூழல் மண்டலத்திற்கோ வன விலங்குகளுக்கோ சிறிதளவும் பாதிப்பு ஏற்படாத அளவிற்கு, சாலை திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜூன், 11ம் தேதி சட்டசபையில் இந்த திட்டம் குறித்து விளக்கம் அளித்த போது, காப்பு காடுகளில், 9.9 கி.மீ., துாரம் வரை தான் இந்த சாலை அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார். 

எனினும், இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்து வருபவர்கள் கூறுகையில், முதல்வர் கூறியதை விட குறைவான துாரத்திற்கு தான் காப்பு காடுகள் வழியாக சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். காப்பு காடுகள் பாதிக்கப்படுவதை தடுக்க, சாலையின் ஒட்டு மொத்த துாரத்தில் 10 கி.மீ., அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. காப்பு காடுகளை ஊடுருவி 6 கி.மீ., துாரத்திற்கு தான் சாலை அமைக்கப்படும். மேலும், 3 கி.மீ., துாரத்திற்கு சுரங்க பாதையில் சாலை செல்லும். எனவே காப்பு காடுகளுக்கு பாதிப்பு வராது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

4வது கட்டுக்கதை:

* இந்த சாலை திட்டம், கார்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் உதவி செய்யும். 
*இந்த சாலை அமைக்கப்பட்ட பிறகு அந்த வட்டாரத்தில் சுரங்க பணிகள் அதிகரித்து விடும். 
*ஜப்பான் நாடு இந்த சாலையை ஒட்டி தொழிற்பூங்கா அமைக்க உள்ளது. எனவே சாலை முழுவதும் ஜப்பான் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும். 

உண்மை நிலவரம்:

*சென்னை - பெங்களூரு, சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில், அவற்றின் திறனையும் மீறி 150 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பை சமாளிக்க தான் புதிய சாலை திட்டம் அமைக்கப்படுகிறது.
* புதிய சாலை அமைக்கப்பட்டால் அந்த வட்டாரத்தில் சுரங்க பணிகள் அதிகரித்து விடும் என்ற புகார் தவறானது. அதுபோன்ற விஷயங்களை தேசிய பசுமை தீர்பாயமும், நீதிமன்றங்களும் கண்காணித்து வருகின்றன.
* சேலம் மாவட்டத்தில் கிடைக்கும் இரும்பு தாதுவை கருத்தில் கொண்டு தான் சேலத்தில், எக்கு தொழிற்சாலை அமைக்கப்பட்டது. அது போல், மக்னீசியம் தாதுவை தோண்டி எடுக்கும் சுரங்கங்கள் அமைக்கப்படும் என்பது தவறான குற்றச்சாட்டு. நாட்டின் கிழக்கு பகுதியில் தான் அதுபோன்ற சுரங்க நிறுவனங்கள் செயல்படுகின்றன. 
*ஜப்பானின் தொழிற்பூங்கா மாமல்லபுரம் அருகே அமைய உள்ளது. அதற்கும் புதிய சாலை திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 

5வது கட்டுக்கதை:


* போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்கனவே உள்ள சென்னை - பெங்களூரு, சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுப்படுத்தினாலே போதுமானது. எனவே புதிய சாலை திட்டம் தேவையில்லை.

உண்மை நிலவரம்:

*சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தற்போது 60 ஆயிரம் கார்கள் பயணிக்கின்றன. அந்த சாலை, அதிகபட்சமாக, 40 ஆயிரம் கார்கள் செல்லும் திறன் கொண்டது. ஆனால், தற்போது 20 ஆயிரம் கூடுதல் கார்கள் பயணிக்கின்றன. இதுபோல், சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தற்போது 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் கார்கள் பயணிக்கின்றன. இது, சாலையின் திறனை விட, 40 ஆயிரம் கார்கள் அதிகம். அடுத்த 15 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை 2.1 மடங்கு அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
* இந்த சாலைகள் தங்களின் திறனை மீறி கூடுதல் வாகனங்களை கையாள்வதால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. இந்த சாலைகளில் இதுவரை, 3,000 பேர் விபத்துகளினால் இறந்துள்ளனர். 10 ஆயிரம் பேர் விபத்துகளில் சிக்கி, உடல் ஊனமுற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் காலத்தில் அதிகரிக்க கூடும். 
இந்த சாலைகளை விரிவுப்படுத்தினால், தலா, 20 ஆயிரம் வீடுகளை இடிக்க வேண்டி இருக்கும். இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. 
*இந்த சாலைகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே புதிய சாலை திட்டம் தேவைப்படுகிறது. இந்த இரண்டு சாலைகளிலும் தற்போது ஒட்டு மொத்தமாக, 1.40 லட்சம் கார்கள் பயணிக்கின்றன. இவற்றில் 60 ஆயிரம் கார்கள் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் கேரளாவிற்கு செல்பவை. இந்த கார்களை திசை திருப்ப தான் புதிய சாலை திட்டம் தேவைப்படுகிறது. 

6வது கட்டுக்கதை:


* சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் உள்ள மலைகள், புதிய சாலை திட்டத்திற்கான அழிக்கப்படும். இது சுற்றுசூழலை கடுமையாக பாதிக்கும்.

உண்மை நிலவரம்:

புதிய சாலை திட்டத்தின் வழியில் உள்ள எந்த மலையும் பாதிப்புக்கு உள்ளாகாது. சேலம் அருகே உள்ள ஒரு மலை அருகே 3 கி.மீ., துாரத்திற்கு சுரங்க பாதை மட்டும் அமைக்கப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது, இதுபோல் சுரங்க பாதைகள் உருவாக்கப்பட்டன. 

7 வது கட்டுக்கதை


* செங்கல்பட்டில் இருந்து சேலத்திற்கு தற்போது இரண்டரை மணி நேரத்தில் சென்று விட முடியும். ஆனால், செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு செல்ல அதே அளவு நேரம் பிடிக்கும்.

உண்மை நிலவரம்:

சென்னையின் தேவைகளை பூர்த்தி செய்ய மட்டும் இந்த சாலை திட்டம் அமைக்கப்படவில்லை. பிற பகுதிகளை சேர்ந்த மக்களும் குறைந்த நேரத்தில் தாங்கள் விரும்பும் ஊர்களுக்கு செல்லவும் இந்த சாலை உதவும். சென்னை - பெங்களுரு, சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலைகளின் ஊடே ஏராளமான குறுக்கு சாலைகள் உள்ளன. இவற்றின் வழியாக தேசிய நெடுஞ்சாலைகளில் நுழையும் வாகனங்கள் தான் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன. இந்த குறுக்கு சாலைகளை கண்காணிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இல்லை. ஆனால், புதிய சாலை திட்டத்தில், ஒன்பது இடங்களில் தான் குறுக்கு சாலைகள் இடம் பெறும். அந்த இடங்களில் தான் புதிய சாலையில் இருந்து வெளியேறவோ, உள்நுழையவோ முடியும். இதன் காரணமாக, புதிய சாலையில் செல்லும் வாகனங்களின் வேகம் அதிகரிக்கும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை போன்ற நகரங்களுக்கு குறைந்த நேரத்தில் சென்றடைய முடியும். அதுபோல், தொழிற்பூங்கா மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை, குறைந்த நேரத்தில் கொண்டு செல்ல முடியும்.

8 வது கட்டுக்கதை:

* சேலத்தில் துவங்கும் இந்த புதிய சாலை திட்டம், செங்கல்பட்டு நகரத்துடன் முடிவுக்கு வந்து விடும். இதற்கும் சென்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, துறைமுகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல இந்த சாலை உதவி செய்யாது.

உண்மை நிலவரம்:

சென்னை அருகே உள்ள வண்டலுாரில், சென்னையின் வெளிவட்ட சாலை துவங்குகிறது. புதிய, 8 வழி சாலை திட்டம், சென்னை வெளிவட்ட சாலையுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்படும். எனவே, வெளிவட்ட சாலை மூலமாக, சென்னை, எண்ணுார் மற்றும் காட்டுப்பாக்கம் துறைமுகங்களுக்கு வாகனங்கள் எளிதில் செல்ல முடியும். 
இதுதவிர சென்னை புறவழிச்சாலை, மதுரவாயல் - துறைமுகம் சாலை திட்டம் போன்றவையும் உள்ளன. வெளிவட்ட சாலை மூலமாக, வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும். தென் சென்னைக்குள் நுழைய, வண்டலுார் - கேளம்பாக்கம் நான்கு வழி சாலை உதவியாக இருக்கும். இதுதவிர கிழக்கு கடற்கரை சாலையும் உள்ளது. 
சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்க, சென்னையை அடுத்த பெருங்களத்துாரில் ஒரு மேம்பாலம் வர உள்ளது. சென்னைக்குள் நுழையும் வாகனங்களுக்கு இந்த மேம்பாலம் உதவியாக இருக்கும்.

9வது கட்டுக்கதை:

* புதிய 8 வழி சாலையில் ஏற்படுத்தப்படும் சுங்கசாவடிகளின் கட்டணத்தினால், பயண செலவு அதிகரிக்கும்.


உண்மை நிலவரம்:

சென்னையில் இருந்து சேலம் செல்ல, புதிய சாலை மட்டும் இருக்கப்போவது இல்லை. பயண செலவு அதிகரிக்கும் என கருதும் மக்கள், மற்ற சாலைகளை பயன்படுத்தலாம். சென்னை - கிருஷ்ணகிரி - சேலம் வழி சாலையில் செல்லும் ஒரு காரின் பயண செலவு, 2,900 ரூபாய்; சென்னை - உளுந்துார்பேட்டை - சேலம் வழி சாலையில் செல்லும் ஒரு காரின் பயண செலவு, 2,625 ரூபாய் என விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காரின் எரிபொருள் செலவு, பயண நேரம், சுங்கசாவடி கட்டணம் உள்ளிட்ட பல அம்சங்களை கணக்கில் கொண்டு தான் இந்த பயண செலவு கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் புதிய 8 வழி சாலையில் செல்லும் ஒரு காரின் பயண செலவு வெறும், 2,240 ரூபாய் மட்டுமே. 

தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், கோவை மற்றும் பெங்களூரு நகரங்களின் வழியாக பாதுகாப்பு தொழில் வழி தடம் அமைய உள்ளது. இந்த வழி தடத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் வர உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு புதிய 8 வழி சாலை உதவியாக இருக்கும். புதிய சாலை அமைந்தால் தங்களுக்கு வசதியாக இருக்கும் என சேலம் மற்றும் கோவையில் தற்போது உள்ள தொழிற்சாலைகள் கருதுகின்றன.

No comments