தமிழ்த் திரையுலகில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று ஒரே நாளில் 6 வெளியீடு

Share:
தமிழ்த் திரையுலகில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் 6 வெளியீடுகள் நடக்க உள்ளன. இது திரைப்பட வெளியீடுகள் அல்ல, இசை, டிரைலர் மற்றும் முதல் பார்வை வெளியீடுகள்.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் திரையுலகத்தின் ஸ்டிரைக், 'காலா' வெளியீடு என பலரும் அவர்களது படங்களை முடித்து வைத்திருந்தாலும் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யாமல் இருந்தார்கள். ஸ்டிரைக்கும் முடிந்து, 'காலா'வும் வெளியாகிவிட்டதால் வரும் வாரங்களில் பல படங்கள் வெளியாக உள்ளன. அவற்றிற்கு முன்னோட்டமாக இன்று சில இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்வுகள் நடக்க உள்ளன.

காலையில் பாண்டிராஜ் இயக்கத்தில், இமான் இசையில், கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.

அடுத்து நண்பகலில் சரவண ராஜன் இயக்கத்தில் பிரேம்ஜி இசையமைப்பில் வைபவ், சனா அல்தாப், அஞ்சனா கிர்த்தி நடிக்கும் 'ஆர்கே நகர்' படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியீடு நடைபெறுகிறது.

பிற்பகலில் 'வத்திக்குச்சி, காலா' படத்தில் நடித்துள்ள திலீபன் நாயகனாக நடிக்கும், அமலா ரோஸ் நாயகியாக நடிக்கும் 'குத்தூசி' படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது. இந்தப் படத்தை சிவசக்தி இயக்க, கண்ணன் இசையமைக்கிறார்.


மாலை 5 மணிக்கு கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ள 'விஸ்வரூபம் 2' படத்தின் தமிழ் டிரைலரை ஸ்ருதிஹாசன் வெளியிடுகிறார். ஹிந்தி டிரைலரை ஆமீர்கான், தெலுங்கு டிரைலரை ஜுனியர் என்டிஆர் வெளியிடுகிறார்கள். அந்த சமயத்தில் படம் சார்பாக பத்திரிகையாளர்களையும் கமல்ஹாசன் சந்திக்க உள்ளார்.

இரவில் எஸ்.ஏ.சந்திரசேகரன், ரோகிணி மற்றும் பலர் நடிக்கும் 'டிராபிக் ராமசாமி' படத்தின் இசை வெளியாக உள்ளது. விக்கி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.

இந்தப் படங்களின் வெளியீடுகளைத் தவிர ராஜு முருகன் இயக்கி வரும் 'ஜிப்ஸி' படத்தின் முதல் பார்வையை இன்று வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தில் ஜீவா, நடாஷா சிங் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒரே நாளில் இத்தனை நிகழ்ச்சியில் தமிழ்த் திரையுலகில் நடப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதே அளவில் படங்களும் ஓடினால் அந்த மகிழ்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும்.